ஊழியர் சேமலாப நிதிய உரிமையாளர்களுக்கு அதில் 20 வீதத்தை வழங்குவது தொடர்பில் பிரதமரின் பிரதான பொருளாதார ஆலோசகர் அஜித் நிவாட் கப்ரால் வழங்கிய ஆலோசனைக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை வௌியிட்டுள்ளன.
குறித்த யோசனையானது ஊழியர் சேமலாப நிதியத்தை கொள்ளையடிக்கும் திட்டம் என தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இன்று தொழில் செய்யும் நாளைய தினம் முதுமையடையவுள்ள மக்களின் வாழும் உரிமையை பறிக்கும் செயலாக இவ்யோசனையைப் பார்ப்பதாக தொழிற்சங்கங்கள் கருத்து வௌியிட்டுள்ளன,
அப்பாவி மக்களின் நிதியை கொள்ளையடிக்க முயலாது இந்நாட்டில் பல ஆண்டுகளாக கொள்ளையடித்து அதிக இலாபத்தை சேமித்து வைத்துள்ள கோடீஸ்வரர்களிடமிருந்து ஒரு பகுதியை வழங்குமாறு அரசாங்கம் கோரவேண்டும் என்று தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு யோசனை வழங்கியுள்ளன.
மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கத்திடம் பணம் இல்லாமையினால் மக்களின் பணத்தை மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் வசந்த சமரசிங்க சிங்கள தேசிய நாளிதழான லங்காதீபவிற்கு கருத்து வௌியிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் ஏற்பாட்ட்ாளர் துமிந்த நாகமுவ தெரிவிக்கையில், தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி ஊழியர் சேமலாப நிதியத்தை பழிகொடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சியாகும் என்று கூறியுள்ளார்.
இந்நிதியத்தின் பணம் அதன் உரிமையாளர்களுக்கே சொந்தம். அது கப்ராலுடைய தனிப்பட்ட கணக்கு அல்ல. இத்திட்டத்தை எவ்விதத்திலும் செயற்படுத்த இடமளிக்கப்போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்