மத்திய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு இவ்வருட இறுதிக்குள் 7000 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும் என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கெகுணகொல்லவில் பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் உள்ள அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பான மதிப்பீடொன்றை அமைச்சு மேற்கொண்டுள்ளது. இதனூடாக மத்திய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பான முழுமையான தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது. இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கும் கணிதம் மற்றும் விஞ்ஞான பாட வெற்றிடங்களை நிரப்புவதற்கு 2000 பட்டதாரிகளை உள்வாங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் கோரப்படும்.
ஆசிரியர் இடமாற்றத் திட்டத்தின் ஊடாகவும் ஆசிரியர் வளங்களை சமப்படுத்துவதற்கும் கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக வெற்றிடங்களை நிரப்புவதற்கு 7000 பேர் ஆசிரியராக உள்வாங்கப்படுவர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.