இலங்கையின் “கண்ணியமான தொழில்” நிறுவுஞ் செயன்முறையை வெளிப்படையானதாகவும், உள்ளடக்கியதாகவும் மாற்றுதல்
ஒவ்வொரு குடிமகனும் தனது அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படும் ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்வதை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியவொரு தொழிலைக் கண்டடையக் கூடியவாறிருக்க வேண்டும். அதனாற்றான், ஏதாவதொரு தொழில் என்றில்லாமல், அனைவருக்குங் கண்ணியமானதொரு தொழில் கிடைப்பதை உத்தரவாதமளிக்குங் கொள்கைகளையுஞ், சட்டப் பொறிமுறைகளையுங் கொண்டிருப்பதற்கு அரசு வலியுறுத்தப்பட வேண்டும். இது ஒரு நாடாக நாம் சர்வதேசத் தொழிலாளர் சம்மேளனத்தின் முன் நிலைப்படுத்துவோமென உறுதியளித்தவோர் உரிமையாகும். மேலும், இது எட்டாவது ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்கினூடாக நிறைவேற்றப்படுமென எமது அரசு உறுதியளித்தவோர் உரிமையாகும்.
இருந்த போதும், இன்றைய தொழில்கள் பின்வருவனவற்றை வழங்குவதில்லை.
- நீங்கள் உங்கள் வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்குப் போதுமான வருமானம்
- விபத்து அல்லது சுகாதரஞ் சார்ந்த பிரச்சினை ஒன்றின்போது, தொழிலாளர்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் போதுமான பாதுகாப்பு
- ஒருவர் தனது குடும்பம், வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் மற்றும் நண்பர்களுடன் செலவழிப்பதற்குப் போதுமான நேரம்
- ஒருவர் தனது தொழில்சார் இலக்குகளை அடைவதற்கு உவப்பான, நியாயமானதும், நேர்மையானதுமானதொரு தொழிற் சூழல்.
- ஒருவரது எதிர்கால எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக் கூடிய தொழில் நிபந்தனைகள்
- வேலைத் தளத்திற் கூட்டு நடவடிக்கையின் மூலம் ஒருவரது குறைகளைத் தீர்ப்பதற்கான சட்டபூர்வ உரிமையைப் பிரயோகிப்பதற்கான அனுமதி
- திடீர் வேலை இழப்பு அல்லது ஓய்வின்போது, தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்குப் போதுமான சமூகப் பாதுகாப்பு
எமது தொழிற் படையிற் பெண்களின் பங்கெடுப்பு வீதம் எச்சரிக்கையளிக்குமளவு குறைவாகவுள்ளது. தனியார் துறையிற் தொழில் நிபந்தனைகள் பெரும்பாலும் ஓய்வு வயதுவரை தொழிலைக் கொண்டு செல்வதற்கு உகந்ததாக இல்லை. எமது தேசிய கண்ணியமான தொழிற் திட்டங்களில், பொதுத்துறையின் முக்கிய பிரச்சினைகள் பிரதிபலிக்கப்படவில்லை. பொதுத்துறை ஊழியர்களுக்கான தொழிற் பாதுகாப்பு மற்றுஞ் சுகாதாரம் தொடர்பான எந்தவொரு சட்டமும் நடைமுறையிலில்லை. தொழில் சார் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அரசு இயந்திரம் பழுதுபட்டுள்ளதுடன், தொழிற் பரிசோதகரால் வினைத்திறனுடன் பணியாற்ற முடிவதில்லை. சர்வதேசத் தொழிலாளர் சம்மேளனத்தின், உறுதிப்படுத்தப்பட்ட சமவாயங்களுடனான உடன்பாடானது, வெளிப்படையான முரண்பாடுகளால் நிரம்பியுள்ளது. சர்வதேசத் தொழிலாளர் சம்மேளனத்தின் ஆழுங் குழு மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்திற்கான ஆணைக்குழு என்பவற்றின் இலங்கை தொடர்பான முடிவுகள் அப்பட்டமாக அலட்சியப்படுத்தப்படுகின்றன. சர்வதேசத் தொழிலாளர் சம்மேளனத்தினது சமூக உரையாடலுக்கான கொள்கைகளினாற் கோரப்படும், பங்குதாரர்களுக்கிடையேயான ஒப்புதலுக்கு இட்டுச் செல்லும், தகவற் பரிமாற்றம், ஆலோசனைகள் மற்றும் இணக்கப் பேச்சுக்களினூடாக, தொழிலுலகத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வினைக் காணவுதவும், நம்பகமான மற்றும் சட்டபூர்வமானதொரு முத்தரப்பு ஈடுபாட்டுப் பொறிமுறை எதுவும் நடைமுறையில் இல்லை.
எமது 2008-12 மற்றும் 2013-17 இன் கண்ணியமான தொழில் நாட்டுத் திட்டங்கள், தொழிலாளர்களது உண்மையான அக்கறைகளை வெளிப்படுத்தத் தவறியதுடன், அவர்களது முக்கியமான பிரச்சினைகள் எதையும் விளிக்கவில்லை.
இலங்கையின் கண்ணியமான தொழில் நாட்டுத் திட்டத்தினை நிறுவுஞ் செயன்முறையானது, சிறப்புரிமை பெற்ற மற்றுந் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருசிலருடன் எல்லைப்படுத்தப்பட்டவொரு கேள்விக்குரிய விடயமாகவே இருந்து வந்துள்ளது. தொழிற் படையின் விதியானது, உண்மையான சமூக ஈடுபாடு எதுவுமில்லாது, கட்சி அரசியல் மற்றும் போலித் தொழிலாளர் பிரதிநிதிகள் என்பவற்றினாலேயே முடிவுசெய்யப்படுகிறது.
கண்ணியமான தொழில் நாட்டுத் திட்டத்தினை நிறுவுஞ் செயன்முறையானது, எதிர்காலத்தில், வெளிப்படையானதும், உள்ளடக்கியதுமான முறையில், அனைத்து சம்பந்தப்பட்ட சமூகப் பங்குதாரர்களின் பங்கேற்போடு செயற்படுத்தப்படுவதை, அரசு, சர்வதேசத் தொழிலாளர் சம்மேளனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பன உறுதி செய்ய வேண்டும் என இம் முறையீட்டின் கையொப்பதாரர்கள் வலியுறுத்துகின்றனர்.
PROTECT மற்றும் UNITE இனது ஒரு பிரச்சாரம் (மனு தொடுப்புக்கு)