மத்திய மாகாணத்தில் நீண்டகாலமாக நிலவிய ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக இணைத்துக்கொள்ளப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரிய உதவியாளர்களை முறையான ஆசிரியர் சேவைக்கு உ்ள்வாங்குமாறு ஆசிரியர் சேவை சங்கத்தின் மத்திய மாகாண செயலாளர் கமகெதர திஸாநாயக்க மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாத்தளை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பின்தங்கிய பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் மாகாண கல்வித் திணைக்களம் குறித்த ஆசிரியர் உதவியாளர்களை சேவையில் இணைத்துள்ளது. இவ்வாசிரிய உதவியாளர்களுக்கான பாடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் நேர அட்டவணையும் வழங்கப்பட்டு கற்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நியமனம் வழங்கி நீண்டகாலமாகியுள்ள நிலையில் அவர்கள் இன்னமும் ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்படவில்லை.
கடந்த 2000மாம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால் ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்கப்பட்டு மாதாந்தம் பத்தாயிரம் ரூபா வேதனம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலர் 2016/2017ம் ஆண்டுக் காலப்பகுதியில் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளில் பயிற்சிகளையும் பூர்த்தி செய்துள்ளனர். எனினும் இதுவரை அவர்களை ஆசிரியர் சேவையினுல் முறையாக உள்வாங்கப்படாமையினால் பாரிய உளவியல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.
குறித்த ஆசிரிய உதவியாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி உடனடியாக அவர்களை ஆசிரியர் சேவையினுல் உள்வாங்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும். அல்லது அவர்களுக்கு நியாயமான தீர்வு கிடைப்பதற்காக தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியேற்படும் என்றும் கமகெதர திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.