கிழக்கு மாகாண ஆசிரியர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு பெறுவதற்கான நடமாடும் சேவையை ஒவ்வொரு மாதமும் நடத்த கிழக்கு மாகாண கல்வியமைச்சு மற்றும் திணைக்களம் முன்வரவேண்டும் என்று ஆசிரியர் சேவை தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் மாதந்தோறும் நடமாடும் சேவைகளை நடத்துவதனூடாக ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என்று தாம் நம்புவதாக அத்தொழிற்சங்கங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நிருவாக ரீதியாக கிழக்கு மாகாணத்தின் தலைநகராக மட்டக்களப்பே இருந்திருக்கவேண்டும். காலனித்துவ ஆட்சியின் போது மட்டக்களப்பே மாகாண தலைநகராக இருந்தது. வடக்கு கிழக்கு இணைப்பின் போது வட மாகாணத்தவர்களுக்கு வசதியாக திருகோணமலை தலைநகராக மாற்றப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்படும் போதுகூட தலைநகரம் மாற்றப்படவில்லை.
வடக்கு கிழக்கில் பணியாற்றும் ஆசிரியர், அதிபர்களின் நன்மைக்கருதி கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் கிழக்கில் உள்ள மாவட்டங்களின் மைய மாவட்டம் என்றவகையில் மட்டக்களப்பில் அமைத்திருக்க வேண்டும். கிழக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களம், மாகாண கட்டிடத் திணைக்களம், மாகாண நீதி அபிவிருத்தித் திணைக்களம், என்பவற்றை மட்டக்களப்பில் அமைக்க முடியுமாக இருந்தால் ஏன் கல்வித் திணைக்களத்தை மட்டக்களப்பில் அமைக்க முடியாது? அதனை மாற்றம் செய்யாது திருகோணமலையிலேயே வைத்திருப்பது பாரிய அநீதியாகும்.
உத்தியோகபூர்வ கடமை நிமித்தம் கல்வித் திணைக்களத்திற்கு செல்லும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட ஆசிரியர் அதிபர்கள் பாரிய பிரச்சினைகளை சந்திக்கவேண்டியுள்ளது. சில சந்தர்ப்பங்களில் மாலை ஆறு மணிவரை அலைந்து திரிந்துவிட்டு சென்ற காரியம் பூர்த்தி செய்யப்படாமல் வெறுங்கையுடன் திரும்ப வேண்டியுள்ளது. புதன் கிழமை மட்டுமே செல்ல அனுமதியுள்ளது.
புதன்கிழமைகளில் முதலமைச்சர் கூட்டம், ஆளுநர் கூட்டம், பிரதம செயலாளர் கூட்டம் என அனைத்து கூட்டங்களும் நடைபெறுவதால் அங்கு செல்லும் ஆசிரியர் அதிபர்கள் தத்தமது காரியங்களை பூர்த்தி செய்ய முடியாது அல்லலுறுகின்றனர்.
எனவே கிழக்கு மாகாண கல்வியமைச்சும் திணைக்களமும் இணைந்து கூட்டாக இரு மாவட்டங்களிலும் நடமாடும் சேவையை நடத்தினால் எமது பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.