கிழக்கு பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்க முடியாத நிலையில் கைகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் பட்டதாரிகளின் சத்தியாக்கிரகத்தில் இணைந்து களத்தில் இறங்கி தனது அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பில் மேற்கொண்டுள்ள சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவு தெரிவித்து வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பல்வேறு பிரச்சினைகள், துன்பங்களுக்கு மத்தியில் கிழக்கு மாகாண பல்கலைக்கழகங்களில் தமது பட்டப்படிப்பை பூர்த்தி செய்த சுமார் 7500 பட்டதாரிகள் இன்று வேலையின்றி போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 45 வயதை அண்மித்தவர்களாகவும் திருமணமாகி குழந்தைகளுடனும் வாழ்கின்றனர். இந்நிலையில் அவர்கள் கற்ற கல்விக்கேற்ற தொழிலை இன்னும் பெறவில்லை. அவர்கள் பல்வேறு கனவுகளுடன் மேற்கொண்ட பட்டப்படிப்பு இன்னும் பயனளிக்காத நிலையில் கனவை நனவாக்க உதவுவது ஆளும் அரசாங்கத்தின் தலையாய கடமை. எனவே வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினை தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று எஸ். லோகநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.