கிழக்கு மாகாணத்தில் போராட்டங்களை நடத்தி வரும் பட்டதாரிகளை கிழக்கின் வெற்றிடங்களுக்கு உள்வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு நேற்று (22) கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் பல நாட்களாக வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கிழக்கு மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் பிரதமரின் ஆலோசனையின் பிரகாரம் முன்னெடுக்கப்படுகிறது. விரைவில் இதற்கு சாதகமான முடிவுகள் அறிவிக்கப்படும்.
அத்துடன் கிழக்கில் புதிய தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் விதமான தொழிற்துறைகள் கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட வேண்டுமெனவும் கிழக்கு மாகாணத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழில்வாய்ப்பின்றி இருக்கும் நிலையில் அவர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதன்போது தெரிவித்தார்.