மாநகரசபைகளில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபடும் சுகாதார தொழிலாளர்களுக்கு சுகாதார காப்புறுதி மற்றும் தூசு கொடுப்பனவு வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
குப்பை சேகரிப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் இம்மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வந்ததையடுத்து குறித்த தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே அமைச்சர் இவ்விடயத்தை தெரிவித்தார்.
மாநகரசபை ஊழியர்கள் மற்றும் குப்பை சேகரிக்கும் சுகாதார தொழிலாளர்கள் ஆகியோரை சந்தித்து உரையாற்றிய அமைச்சர், புதிய குப்பை சேகரிப்பு திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்ததுடன், குறித்த ஊழியர்களுக்கான சுகாதார காப்புறுதி மற்றும் தூசு கொடுப்பனவு வழங்குமாறு மாநகரசபை ஆணையாளர்களுக்கும் அறிவுறுத்தினார்.
மேலும் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை குப்பை சேகரிக்கும் ஊழியர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அனுப்புமாறும் குப்பை சேகரிக்கும் போது பொருத்தமான ஜெக்கட்டுகள், காலணிகள் , கையுறைகள் என்பவற்றை அணிவதை கட்டாயமாக்குமாறும் ஆணையாளர்களுக்கு உத்தரவிட்ட அமைச்சர் அத்தொழிலாளர்கள் சமூக தரத்தை உயர்த்தும் நோக்கிலேயே இச்செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.