
அரச தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இதுவரை கட்டணம் அறிவிட்டு வழங்கப்பட்ட அனைத்து பாட நெறிகளையும் இலவசமாக மாணவர்கள் கற்பதற்கான வாய்பை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக நிபுணத்துவ அபிவிருத்தி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் மஹிந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு, நாராஹேன்பிட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள நிபுணத்துவ அபிவிருத்தி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எதிர்வரும் 2017ஆம் ஆண்டு வரவு செலவு முன்மொழிவில், குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் தேசிய தொழிற்கல்வி அதிகாரசபை, சமுத்திர கல்வி பல்கலைக்கழகம், தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உட்பட அமைச்சின் கீழியங்கும் அனைத்து நிறுவனங்களிலும் தொழிற்கல்வியை இலவசமாக மாணவர்கள் கற்க முடியும்.
இவ்வாறு, இலவசமாக தொழிற்கல்வியை வழங்குவதற்கு 300 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது.
இளைஞர் மத்தியில் தொழிலின்மையை குறைப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.