ஆடை உற்பத்தி கைத்தொழில் ஈடுபட்டுள்ள 80,000 தொடக்கம் 100,000 பேர் வரையானவர்கள் தொழில் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு பின்னரான காலப்பகுதியில் ஆடை உற்பத்தி கைத்தொழில் பாரிய தாக்கம் ஏற்படும் என்று கணித்திருந்தபோதிலும் இந்தளவு மோசமானதாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை என்று ஆடை உற்பத்தியாளர் சங்கத்தின் கூட்டமைப்பு (Joint Apparel Association Forum – JAAF) தெரிவித்துள்ளது.
சுமார் 300 ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 990,000 இற்கும் அதிகமானவர்கள் பணியாற்றியும் தங்கியும் வாழ்கின்றனர். தற்போதைய கணிப்பின் படி 80,000 தொடக்கம் ஒரு இலட்சம் பேர் வரை தொழில்வாய்ப்பை இழப்பை சந்திப்பர் என கணப்பிடப்பட்டுள்ளது. இது தொழில் எந்தளவு நெகிழ்வானதாக இருக்கும் என்பதை பொறுத்தது என்கிறார் JAAF இன் தலைவர் எ. சுகுமாரன்.
தொழிற்சாலையொன்றில் உற்பத்தித் திறன் 35- 40 வீதத்தால் குறைவடையும் போது 1.5 தொடக்கம் 2 பில்லியன் டொலர் வரையான இழப்பை சந்திக்க நேரிடும். இவ்வாறான சூழ்நிலையில் தொடர்ச்சியாக ஒரே எண்ணிக்கையான தொழிலாளர்களை கொண்டிருப்பது சாத்தியமில்லை.
ஆடை உற்பத்தியினூடாக கடந்த ஆண்டு இலங்கை 5.3 பில்லியன் டொலர்களை ஈட்டியது. கடந்த 2018ம் ஆண்டு 5.1 வீதமாக இருந்தது. கொரோனாவுக்கு முன்னர் இந்த 2020ம் ஆண்டு 6 வீதத்தால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
மிகப் பெரிய கம்பனிகள் இன்னும் சில மாதங்களுக்கு தாக்கு பிடிக்கும். ஆனால் சிறிய தொழிற்சாலைகளின் நிலை கவலைக்கிடமானவை. அவை கிடைக்கும் கட்டளைகளில் (orders) தங்கியுள்ளன. பாரிய கம்பனிகள் முடக்கக் காலப்பகுதியில் ஊழியர்களுக்கு 50 வீத சம்பள குறைப்பை மேற்கொண்டது. சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் பணியாற்றவர்களுக்கு அவ்வாறு வழங்குவது சிரமமானது.
எமது பிரதான சந்தைகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இரண்டாம் அலை அல்லது மற்றொரு முடக்க நிலை ஏற்படுமா என்பதே தற்போது நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. இரண்டாம் தடவையும் பாதிக்கப்பட்டால் எம்முடைய நிலை மிகவும் மோசமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.