சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்று கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 29 ஆண்களையும் எதிர்வரும் 20ம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு காலி பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் ஹர்ஷன கெக்குனவெல நேற்று (06) உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட 4 பெண்களுக்கான வழக்கு விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி விசாரணைக்கு எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிலாபம், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த குறித்த பெண்கள், உட்பட 41 பேர் சிலாபம் கடற்பகுதியில் படகில் ஏறி அவுஸ்த்திரேலியா நோக்கி செல்ல முற்பட்டுள்ளனர்.
அவ்வாறு அவர்கள் சென்ற படகு இலங்கை கடற்பரப்பில் சுமார் 780 மீ்ற்றர் தொலைவில் விபத்துக்குள்ளாகியிருந்த நிலையில் வேறொரு கப்பலினூடாக கடற்படை தலைமையகத்திற்கு அறிவிக்கப்பட்டு, தலைமையகம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த கடற்படைக் கப்பலான நந்திமித்ராவுக்கு தெரியப்படுதியுள்ளனர். அவ்விடத்திற்கு விரைந்த குறித்த கடற்படை கப்பல் அதில் பயணித்தவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு முதலுதவி மற்றும் உணவு, தண்ணீர் வழங்கிய கடற்படையினர் கடந்த மாதம் 25ம் திகதி தெற்கு கடற்படை முகாமிற்கு அழைத்து வந்து மேலதிக விசாரணைக்காக துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். துறைமுகப் பொலிஸார் குறித்த 41 பேரையும் நீதிமன்றில் நிறுத்திய நிலையில் சிறு வயது பிள்ளைகள் 8 பேரும் வழக்கிலிருந்த நீக்கப்பட்டதுடன் 4 பெண்களும் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கவும், 29 ஆண்களும் தடுப்புக்காவலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.