இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக நுழைய முட்பட்ட இலங்கையர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தவிர்க்கும் வகையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் இவர்கள் நேற்று முன்தினம் (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாருக்கு வடக்கே சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று பயணித்ததை அவதானித்த கடற்படையினர் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாட்கடத்தல் நடவடிக்கைக்கு உதவியாக இருந்த மன்னார் பேசாலை பிரசேதத்தின் ஊருமலை கிராமத்தைச் சேர்ந்த 30, 34 வயதுடைய இருவரும் அடையாளங்காணப்பட்ட நிலையில் அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக வருகைத் தந்த மூவரும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பிரதேசங்களைச் 28, 37 மற்றும் 49 வயதுடையவர்கள் என்றும் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் பயணித்த படகு என்பன கடற்படையினருக்கு சொந்தமான தம்மென்னா நிறுவனத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்களை தலைமன்னார் பொலிஸிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், புதுகுடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரியென்றும் அவர் அண்மைக்காலமாக சட்டவிரோதமாக பல தடவை சென்று வந்துள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.