இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்புடைய மற்றும் அவர்கள் அங்கத்துவம் வகிக்கின்ற தொழிற்சங்கங்களின் தரவுகளை தொழில் திணைக்களத்திடமிருந்து பெற்றுக் கொள்வதென்பது இயலாத காரியமாகவிருக்கிறது. இதன்படி பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான தகவல்களை கோரி கடந்த பெப்ரவரி மாதம் தொழில் திணைக்களத்திடம் விண்ணப்பித்த போதும் மேன்முறையீடு, ஆணைக்குழுவுக்கான மேன்முறையீடு என ஜுன் மாதமே தகவல்களை பெற்றுக்கொள்ள முடிந்தது. அதன்படி தொழிற்சங்கங்களில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கை தொடர்பான கேள்விக்கு (03/01/06) இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் 38,3007 (2016/2017) அங்கத்தவர்களும் தொழிலாளர் தேசிய சங்கத்தில் 26172 (2017/2018) அங்கத்தவர்களும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் 148,242 (2017/2018) அங்கத்தவர்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏனைய தொழிற்சங்கங்கள் தொடர்பான தகவல்கள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தொழிற்சங்கங்கள் பெற்றுக் கொள்கின்ற சந்தாப்பணம் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு தொழில் திணைக்களத்தினால் மறுக்கப்பட்டன. எனினும் இவ்விடயம் தொடர்பான தகவல் கோரிக்கைக்கு ஏற்கனவே இருவருக்கு பதில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்திலிருந்து அறவிடப்படும் 150 ரூபா சந்தாப் பணத்துக்கு என்ன நடக்கிறது என்பது தொடர்பாக ஆராய முற்பட்ட வேளையில், தேர்தல்கள் ஆணைக்குழுவிடமிருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் ஆண்டு நிதியறிக்கையினை (23/199) பெற்றுக்கொள்ள முடிந்தது. இதன்மூலம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, பிரஜைகள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஆகிய கட்சிகளின் தகவல்களை பெற்றுக்கொள்ள முடிந்தது.
ஒவ்வொரு மாத சம்பளத்தின் போதும் தொழிலாளர்களிடமிருந்து 150 ரூபா சந்தாப்பணமாக அறவிடப்படுகின்றது. இந்த பணத்தின் மொத்த தொகை கோடிகளை எட்டுகிறது. எவ்வாறு இந்த கோடிகள் செலவு செய்யப்படுகின்றன, இந்த கோடிகளால் மக்கள் பெறுகின்ற நன்மையென்ன? என்பதுவே முக்கியமாகும். 2015/2016 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் 396,869 உறுப்பினர்களை கொண்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சந்தாப்பணத்தின் மூலம் 94,731,687 ரூபாவைப் பெற்றுக் கொண்டுள்ளது. 2016/2017 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் 77,71,933 ரூபாவும் 2017/2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 77,580,520 ரூபாவும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அரசியல் நிதியெனும் வகையில் 2015/2016 காலப்பகுதியில் 10,525,743 ரூபாவும் 2016/2017 காலப்பகுதியில் 8,639,104 ரூபாவும் 2017/2018 காலப்பகுதியில் 19,668,944 ரூபாவும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏனைய வரவுகள் எனும் வகையில் வட்டி, வாடகை, முதலீடுகள், கடன்கள் மூலமான வட்டி மற்றும் காப்புறுதி என 2015 /2016 காலப்பகுதியில் 20,879,977 ரூபாவும் 2016/2017 காலப்பகுதியில் 23,375,980 ரூபாவும் 2017/2018 காலப்பகுதியில் 19,668,944 ரூபாவும் இலாபமாக பெற்றுக்கொண்டுள்ளன. இவ்வாறு சந்தாப்பணம் , அரசியல் நிதி மற்றும் ஏனைய வரவுகள் என்ற அடிப்படையில் மொத்தமாக 2015/2016 காலப்பகுதியில் 126,37,407 ரூபாவும் 2016/2017 காலப்பகுதியில் 109,767,017 ரூபாவும் 2017/2018 காலப்பகுதியில் 973,49,464 ரூபா என்றவகையில் வருமானம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் 30 – 40 வருடங்கள் பெருந்தோட்டங்களில் கஸ்டப்பட்டாலும் இறுதியாக அவர்களுக்கு EPF/ETF எனும் வகையில் 10 – 15 இலட்சம் வரையிலேயே கிடைக்கின்றது. ஆனால் தொழிற்சங்கங்கள் கோடிகளில் இலாபத்தினை ஒரு வருடங்களிலேயே எட்டிவிடுகின்றன. எனவே பெருந்தோட்டங்களில் கஷ்டப்படுவதை விட தொழிற்சங்கங்கள் மூலம் அதிகம் இலாபத்தை பெறலாம் என்பது தெளிவாகிறது.
அதனால்தான் என்னவோ, பெருந்தோட்டங்களை மையப்படுத்தி 34 தொழிற்சங்கங்கள் (தொழில் திணைக்களம் – RTI) இயங்கி வருகின்றன. இவ்வாறு பெற்றுக்கொண்டுள்ள கோடிகளின் மூலம் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஏதேனும் கருமங்கள் ஆற்றப்பட்டிருக்கிறதா என கணக்கறிக்கையில் தேடிய போது ஏமாற்றமே மிஞ்சியது. இவர்கள் பெற்றுக்கொள்ளும் வருமானத்தில் பெரும்பகுதியை அவர்களின் நிர்வாகச் செலவுகளுக்காக பயன்படுத்துகின்றனர். தொழிலாளர்களின் நிர்வாகத்துக்காக அல்ல. இது எல்லா கட்சிகளிடமும் இருக்கும் பொதுவான பண்பாகும். இதன்படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாகச் செலவுகளுக்காக 2015/2016 காலப்பகுதியில் 98,743,604 ரூபாவும் 2016/2017 காலப்பகுதியில் 98,444,643 ரூபாவும் 2017/2018 காலப்பகுதியில் 67,597,127 ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளன.
இதில் அலுவலக ஊழியர்களுக்கான கொடுப்பனவு, அவர்களுக்கான ஏனைய கொடுப்பனவுகள் உள்ளிட்ட உள்வீட்டுத் தேவைகளே நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமாக கமிட்டிகளுக்கான செலவுகள் என்றவகையில் மாவட்ட மட்டத்திலும் தோட்ட மட்டத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைகளை கொண்டு செல்கின்ற தொழிற்சங்க தூதுவர்களாக செயற்படும் மாவட்ட கமிட்டிகளுக்கு 2015/2016 காலப்பகுதியில் 3,002,000 ரூபாவும் 2016/2017 காலப்பகுதியில் 2,530,000 ரூபாவும் 2017/2018 காலப்பகுதியில் 935,080 ரூபாவும் செலவளிக்கப்பட்டுள்ளதோடு தோட்ட கமிட்டிகளுக்கான ஒதுக்கீடுகளுக்காக 2015 /2016 காலப்பகுதியில் 5,149,071 ரூபாவும் 2016/2017 இல் 4,282,765 ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவு செய்யப்பட்டிருக்கிறது.
அதேவேளை தொழிற்சங்கங்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மேதின நிகழ்வுகளுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் 2015/2016 காலப்பகுதியில் 5,007,940 ரூபாவும் 2016/2017 இல் 5,448,872 ரூபாவும் 2017/2018 இல் 4,939,560 ருபாவும் செலவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மேதினத்துக்கும் அண்ணளவாக 50 இலட்சம் ரூபாவினை செலவு செய்யும் நிலை காணப்படுகையில் இவ்வாறான பிரமாண்ட மேதினங்களின் மூலம் தொழிலாளர்களுக்கு என்ன உரிமையினை பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
இதேவேளை மலையக மக்கள் முன்னணியானது, 01.04.2015 – 31.03.2016 வரையான காலப்பகுதியில் 1,934,000 ரூபாவினை நிதியாக பெற்றுள்ளதாக நிதியறிக்கையில் தெரிவித்துள்ளதுடன் இதில் கொடுப்பனவு, போக்குவரத்து கொடுப்பனவு, பண்டிகைக்கால கொடுப்பனவு என 1,920,628.52 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை 01.05.2017 – 31.05.2018 வரையான காலப்பகுதியில் 252,647.18 நிதியாக பெற்றிருப்பதோடு மொத்தமும் நிர்வாகச் செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
தொழிலாளர் தேசிய முன்னணியானது, 2015 – 2016 காலப்பகுதியில் சந்தாப்பணமாக 1,080,230 ரூபாவினையும் 2016 – 2017 இல் 906,170 ரூபாவினையும் பெற்றுள்ளதோடு அவை மொத்தமும் நிர்வாகச் செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை கடந்த காலங்களில் குறுகிய நோக்கத்துக்காக மலையக மக்களை தொலைக்காட்சி பேச்சு மூலம் ஆட்சி செய்த ரங்காவின் பிரஜைகள் முன்னணியானது, 2016 ஆம் ஆண்டில் 31,650 ரூபாவும் 2017 மற்றும் 2018 இலும் இதே தொகையினை நிலுவையாக கொண்டிருக்கின்றன.
அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியானது, 2018 மார்ச் 31 இல் 1,400,000 ரூபாவினை நன்கொடையாக பெற்றிருப்பதாக கணக்கு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழுவிலிருந்து மேற்கூறிய கட்சிகளின் கணக்கறிக்கையினை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது. தொழிலாளர் தேசிய சங்கமானது தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்ட கட்சியாக இல்லாமையினால் அவற்றின் கணக்கறிக்கையை எம்மால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் தொழில் திணைக்களத்தின் தகவல்களின்படி 01.04.2016 – 31.03.2017 வரையான காலப்பகுதியில் 34,524,328.41 ரூபாவினை சந்தாப்பணமாக பெற்றுக்கொண்டுள்ளமையை அறிந்து கொள்ள முடிகின்றது.
அவ்வாறு தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து சந்தாப்பணத்தினை பெற்றுக்கொள்ளும் தொழிற்சங்கங்கள் அவர்களுக்கு என்ன உதவிகளை செய்துவிட்டதாக நினைக்கின்றார்கள். ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வருபவர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ளும் நிதியிலேயே அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றார்களே தவிர, தமது கட்சியின் மூலமான வருமானத்தை கட்சி செலவுகளுக்காகவும் தமது செலவுகளுக்காகவும் பயன்படுத்தி கொள்கின்றார்கள். இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் பிறந்தநாள் செலவுகளை கூட மக்களின் சந்தாப்பணத்தில் செலவு செய்து கொண்டாடும் நிலை காணப்படுகின்றது. இதேவேளை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை தமது கட்சியின் மூலமாக முன்னெடுத்து அவற்றுக்கு சொந்தம் கொண்டாடி வரும் நிலையே காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றது. இதன்மூலம் தொழிலாளர்களை வருமானத்துக்காகவும் பதவிக்காகவும் பலர் பயன் படுத்துகின்றனரே தவிர உண்மையில் தொழிலாளர்கள் மீதான கரிசணையில் எவரும் செயற்படுவதாக தெரியவில்லை.
நன்றி – தினக்குரல்