சமூக வலைத்தளங்களினூடாக கடன் வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக கூறி வங்கித் தரவுகளை பெற்று உங்கள் பணத்தை மொத்தமாக சூறையாடும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளதாக கணினி அவசர தயார்நிலை குழு எச்சரித்துள்ளது.
இத்தகவலை கணினி அவசர தயார்நிலை குழுவின் தலைவர் ரவிந்து மீகஸ்முல்ல தேசிய ஆங்கில நாளிதழான டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார்.
இம்மோசடி நடவடிக்கை தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வண்ணமுள்ளன. கடந்த ஜூலை மாதம் இப்பிரச்சினை ஆரம்பமானது. தற்போது மிக வேகமாக அதிகரித்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இம்மோசடி செயற்பாடு குறித்தும் ஒன்லைனில் தமது வங்கித் தகவல்களை வழங்குவது குறித்தும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களினூடாக இத்ததைய மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர்கள் வங்கி கணக்குத் தவிர ஏனைய தனிப்பட்ட தகவல்களையும் சேமிப்பதுடன் உங்கள் தேசிய அடையாள அட்டை, பிறப்புச்சான்றிதல் ஸ்கேன் பிரதி என்பவற்றையும் கோரலாம். அதன் பின்னர் ஒரு தடவை பயன்படுத்தப்படும் இரகசிய இலக்கம் அல்லது சரிபார்ப்பு குறியீட்டை கேட்கலாம். அவற்றை குறித்த வங்கிக்கு அனுப்பி அனுமதி பெற்று ஒன்லைன் கணக்கை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறும் அவர்கள் வங்கியில் உள்ள பணத்தை முழுமையாக எடுக்க அதனைப் பயன்படுத்துவார்கள்.
இணையதளத்தில் ஆயிரக்கணக்கான போலி ஒன்லைன் கடன் வழங்கும் வசதிகள் காணப்படுகின்றன. ஒன்லைன் கடன் பெற விரும்புபவர்கள் ஒன்லைன் கடன் வழங்குநர்கள் தொடர்பில் மத்திய வங்கியுடன் தொடர்புகொண்டு அவர்கள் மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ளனரா என உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் முகப்புத்தகம், வட்ஸப், வைபர் என்பவற்றினை இவ்வேமாற்று நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் இரகசிய இலக்கம் அல்லது சரிபார்ப்பு குறியீடு என்பவற்றுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்கவேண்டாம் என்றும் மீகஸ்முல்ல எச்சரித்துள்ளார்.
இதேவேளை சமூக வலைத்தளங்களில் உள்ள கடன்மோசடி வலைத்தளங்களை உடனடியாக தடை செய்யுமாறு நிதித்துறைசார் கணினி பாதுகாப்புக்கு சம்பவங்களுக்கு பொறுப்பான குழு இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்படத்தக்கது.