சர்வதேச மகளிர் தினம் போராட்டத்துக்குரியது

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சமூக மட்டத்தில் முக்கிய பதவிகளை வகிக்கும் பெண் பிரமுகர்களிடம் வேலைத்தளம் நேர்காணல் மேற்கொண்டு வருகின்றது. செங்கொடி தொழிற்சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் ஆனந்தி சிவசுப்ரமணியம் எம்முடன் இணைந்து கொண்டார். இவர் கடந்த 12 ஆண்டுகளாக இந்தத் துறையில் பணியாற்றி வருகின்றார்.

கேள்வி – உங்கள் பணியிடத்தில் மற்றும் துறைசார் பணிகளில் பெண்களின் உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பில் பெண்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகள் என்ன?

பதில் – தொழிலாளர்கள் உரிமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பேசினாலும்கூட அது கேள்விக்குறியாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக பெண் தொழிலாளர்களின் உரிமைகள் இன்னும் மறுக்கப்பட்டதாக உள்ளது. அவர்களின் பல உரிமைகள், உரிமைகள் என்று அடையாளப்படுத்தப்படாமல் – அங்கீகரிக்கப்படாமல், அன்றாட வாழ்வில் கடந்துபோகும் ஒரு சம்பவங்களாக பதிவிடப்படுகின்றன. நிரவாக ரீதியிலான பிரச்சினைகளுக்கு அப்பால், பெண்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைதான் பாலியல்; ரீதியிலான துன்புறுத்தல்கள். உடல் ரீதியிலான துன்புறுத்;தல்களுக்கு அப்பால், உள ரீதியிலான துன்புறுத்தல்கள் தொடர்கின்றன. ஆண்களால் வார்த்தைகள் மூலமாக பெண்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இவற்றுக்கு அப்பால், பணியிடத்தில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

கேள்வி – இந்தப் பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு நீங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்?

பதில் – எமது தொழிற்சங்கமானது தொழிலாளர் உரிமை தொடர்பில் செயற்பட்டு வருகிறது. அதில் பெண் தொழிலாளர் தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். தொழிற்சங்கத்துறையை எடுத்துக்கொண்டால், பெண் தலைமைத்துவங்களை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் இல்லாத நிலைமை இருந்தது. இந்த நிலைமையானது தற்போது மாறியுள்ளது. எமது சங்கத்தை எடுத்துக்கொண்டால், பெண் செயலாளர் நியமனத்துடன், அதற்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளோம். இதுபோல சமூக மட்டத்திலும், பெணிகள் தலைமைத்துவங்களை ஏற்படுத்த ஊக்குவித்து வருகின்றோம்.

குறிப்பாக பெருந்தோட்டப் பெண்கள், ஆடைத் தொழிற்சாலையில் தொழிலாற்றும் பெண்கள் மற்றும் வீட்டுப் பணி செய்யும் பெண் தொழிலாளர்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்.

தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றமைக்கு தொழிலாளர்களும் ஒரு காரணமாக அமைகின்றனர். நாம்தான் தொழிற்சங்கம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக அவர்கள் மத்தியில் தெளிவுபடுத்தும் நடவடிக்கையை நாம் மேற்கொள்கின்றோம்.

கேள்வி – இந்தத் துறைக்குள் நீங்கள் வருவதற்கு காரணமாய் அமைந்த பின்னணி பற்றி சுருக்கமாக குறிப்பிட முடியுமா?

பதில் – தொழிற்சங்கத்துறைக்குள் எனது பிரவேசமானது தற்செயலாக இடம்பெற்றதொன்றாகும். உயர்தரக் கல்வியை நிறைவுசெய்த பின்னர், குடும்ப சூழ்நிலை காரணமாக தொழில்புரிய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானேன். இந்த நிலையில், தொழிற்சங்கம் தொடர்பிலும், தொழிலாளர்கள் மத்தியில் பணி புரிவது தொடர்பில் எவ்;;வித அனுபவமும் இன்றி, எனது தொழில்துறை பயணம் ஆரம்பமானது. இந்தத் துறையில் பணியாற்றும்போதுதான், சமூகச் சூழலையும், வறுமை நிலைமையும் அதற்கான காரணங்களை அடையாளம் காணகூடியதாக இருந்தது. முதலாளித்துவம் இதற்கு முக்கிய காரணமாகும்.

உயர்தரக் கல்வியை நிறைவு செய்ததன் பின்னர், இந்தத் துறைக்கு வந்த நான், தற்;போது பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளேன். ஆண், பெண் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அதிலிருந்து அவர்களை மீட்க வேண்டும் என்ற மனோபாவம், அதற்காக என்னால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தத் தொழிற்சங்கத்துறையில் எனது பயணம் தொடர்கிறது.

கேள்வி – நீங்கள் அல்லது உங்கள் துறைசார் பணியாளர்கள் இந்தத் துறையில் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் அல்லது நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுகின்ற நிலைமைகள் இருக்குமாயின், அதைப்பற்றி சுருகது;;கமாக கூற முடியுமா?

பதில் – குறிப்பாக பெருந்தோட்டப் பெண்கள், ஆடைத் தொழிற்சாலையில் தொழிலாற்றும் பெண்கள் மற்றும் வீட்டுப் பணி செய்யும் பெண் தொழிலாளர்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். இதில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை எடுத்துக்கொண்டால், பணியிடங்களில் (கொழுந்து மலை) அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவர்களுக்கு அங்கு மலலக்கூட வசதிகூட இல்லை. ஒரு ஓய்வறை இல்லை. இந்த நிலைமையில் அவர்களின் தேவைகளையும், கடமைகளையும், அந்த தேயிலை மலைகளிலேயே நிறைவுசெய்ய வேண்டிய நிலைமையே இன்றும் தொடர்கின்றது. அட்டை, பூச்சிகள், குளவி மற்றும் பாம்பு உள்ளிட்ட விலங்குகளின் தாக்ககுதல்களுக்கும் அவர்கள் உள்ளாகின்றனர். இவற்றுக்கு அப்பால், மேற்பார்வையாளர்களால், வார்த்தைகளின் ஊடாக உளவியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்.

அடுத்தாக, ஆடைத் தொழில்துறை பெண் பணியாளர்களை எடுத்துக்கொண்டால், அவர்களுக்கு நாளாந்தம், குறுகிய நேரத்தில் பாரியளவான இலக்குகள் (ஆடைகளின் எண்ணிக்கை) வழங்கப்பட்டு, அவற்றை செய்து முடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்ததுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதனிடையே அவர்கள் தமது தேவைகளை நிறைவுசெய்துகொள்ள வேண்டியுள்ளதுடன், உணவையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை யாவும் தொழில் என்ற அடிப்படையில் மாத்திரமே பார்க்கப்படுகின்றதே தவிர, தொழிலாளர்களின் உரிமை என்ற அடிப்படையிலும், அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றது என்ற அடிப்படையிலும் பார்க்கப்படுவதில்லை.

இவற்றுக்கு அடுத்தபடியாக, வீட்டுப் பணி புரியும் பெண்தொழிலாளர்கள் தொடர்பில் சட்டங்கள் இல்லாதுள்ளது. இதனால், அவர்களின் உரிமைகளும் மறுக்கப்பட்டு, தொழில் என்ற அடிப்படையிலேயே, பார்க்கப்படுகின்றது. ஆகக்குறைந்தது அவர்களுக்கு அடிப்படை சம்பளம்கூட நிர்ணயம் செய்யப்படவில்லை. இப்படியான நிலைமையிலேயே, தொழிலாளர்களின் குறிப்பாக பெண் தொழிலாளர்களின் நிலைமை தொடர்கின்றனது.

கேள்வி – மாற்றத்திற்கான உங்களின் பரிந்துரைகள் என்ன?

பதில் – தமது பிரச்சினைகளுக்கு எதிராகவும், உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவும் தொழிலாளர்கள் போராட வேண்டும். தொழிலாளர் தொடர்பான சட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் இன்னும் உரியை முறையில் செயற்படவில்லை. தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் என்ற அடிப்படையில், ஒன்றிணைவதற்கான வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். தொழிலாளர் துறையைப் பொறுத்தவரை பெண்கள் முன்னேற வேண்டும்; ஆண்கள் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும். விசேடமாக ‘சர்வதேச மகளிர் தினம் என்பது கொண்டாட்டத்துக்குரிய நாள் அல்ல: அது போராட்டத்துக்குரிய நாள்: வெற்றிக்கான நாள் ஆகும்’

மகளிர் தினத்தைத கொண்டாட்டத்துடன் மட்டும் நிறைவு செய்யாமல், உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் போராட்ட நாளாக, உரிமைகளை பெற்றுக்கொள்ளும் வெற்றியை அடையாளப்படுத்தும் நாளாக பார்க்கப்பட வேண்டும். ஏனெனில் சர்வதேச மகளிர் தினத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட பெண்களின் உரிமைகளுக்கு அப்பால், இன்று பெண்களின் எத்தனையோ உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. எனவே, அவற்றை ஆண்டுதோறும் பெற்றுக்கொள்ளும் போராட்டத்துக்கு உரிய நாளாக நாம் பார்க்க வேண்டும்.

பெண்கள் தமது உரிமைகளைப் பெற்றெடுக்க தாமே போராட வேண்டும். பெண் தொழிலாளர்கள் அறிவுபூர்வமாக முன்னேற்றம் கண்டு, தமது பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதற்கு எதிராக போராட வேண்டும். இந்தப் பணியையே செங்கொடி சங்கம் முன்னெடுத்து வருகின்றது.

– என்றார் செங்கொடி தொழிற்சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் ஆனந்தி சிவசுப்ரமணியம்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435