சுகாதார அமைச்சின் ஊடாக சுகாதார உதவியாளர் பதவியை பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்த குழுவினரை கைது செய்ய மருதானை மற்றும் புறக்கோட்டை பொலிஸ் நிலையங்களில் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பதவிகளை பெற்றுத்தருவதாக கூறி பலரிடம் இலட்சக்கணக்கான பணத்தை இக்குழு பெற்றுக்கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
இம்மோசடி செயற்பாட்டுடன் தொடர்புபட்டவர் என்று சந்தேகிக்கப்படும் சுங்கத் திணைக்கள உதவியாளர் ஒருரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டு எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று கொழும்பு மத்திய பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் நிஸாந்த சொய்சா தெரிவித்துள்ளார்.
குறித்த பண மோசடி தொடர்பில், மருதானை பொலிஸ் நிலையத்திற்கு 4 முறைப்பாடுகளும் கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு ஒரு முறைப்பாடும் கிடைத்துள்ளது. முறைப்பாட்டாளர்களிடமிருந்து சுமார் 14 இலட்சம் ரூபா பண மோசடி செய்யப்பட்டுள்ளமை முறைப்பாடுகளிலிருந்து தெரியவந்துள்ளதாக
பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
இம்மோசடி நடவடிக்கைதிட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போலி நியமனக்கடிதங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.