இலங்கையின் 72ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி பிரித்தானியர்களிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது. சுதந்திர போராட்ட வரலாற்றில் தொழிற்சங்கங்களினதும், தொழிலாளர்களின் பங்கு அளப்பரியது. எனினும், இலங்கை சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், தொழிலாளர்களின் நிலைமை எவ்வாறுள்ளது என்பது ஆராய்ந்து பார்க்கவேண்டியதொன்று.
காலணித்துவ காலத்தில் வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கையர்கள் என்ற அடிப்படையில் அனைவரும், இன, மத பேதங்களைக் கடந்து போராடினர். ஏனெனில், பிரித்தானியர்கள் இலங்கையர்களை தங்களது அடிமைகளாகவும், கூலித் தொழிலாளர்களாகவுமே பயன்படுத்தினர். தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி, அவற்றின் மூலம் பெருமளவில் வருமானம் ஈட்டினர். குறிப்பாக இந்தியாவிலிருந்து பிரித்தானியர்களினால் அழைத்துவரப்பட்ட தமிழர்களின் நிலைமை மிகவும் மோசமானதாகும்.
காடுகளிலும், மலைகளிலும் தேயிலையை பயிரிடுவதற்கும், மலையக தொழிலாளர்கள் அன்றாடம் பல சொல்லாணாத் துன்பங்களை அனுபவித்தார்கள். அதிகளவான உழைப்பு, உழைப்புக்கு ஏற்ற ஊதியமின்மை, தொழில் பாதுகாப்பு இன்மை, தொழில் உரிமைகள் இன்மை என பல்வேறு துன்பங்களை அனுபவித்தனர். அதுமாத்திரமல்ல, இலங்கையிலிருந்த அனைத்து தொழிலாளர் வர்க்கமும் பெரும் துன்பங்களையே அனுவித்தது.
இவ்வாறான பின்னணியில், அனைத்து இலங்கையர்களின் போராட்டத்தின் விளைவாக 1948ஆம் ஆண்டு பிரித்தானியர்களிடமிருந்து இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது.
ஆனாலும், இந்த 72 ஆண்டுகளில் தொழிலாளர்கள் எவ்வாறான சுதந்திரத்தை பெற்றுள்ளார்கள் என்பது கேள்விக்குறியே.
அரச மற்றும் தனியார்துறை தொழிலாளர்கள் மாறிமாறிவரும் அரசாங்களிடம் தங்களது வேதன அதிகரிப்புக்காக போராட்டிவருகின்றனர். மறுபுறத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தங்களது நாளாந்த அடிப்படை வேதனத்துக்காக போராடுகின்றனர்.
ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் தொழில்கோரி போராடுகின்றனர். இப்படியாக தொழிலாளர்களின் போராட்ட வாழ்வு தொடர்கதையாகவுள்ளது.
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரான காலப்பகுதியில் தொழிற்சங்கங்கள் எவ்வாறு தோற்றம் பெற்றன அவற்றின் வளர்ச்சி எவ்வாறு இருந்தன தொழிலாளர்களின் நிலைமையை என்பனவற்றை சற்று பார்ப்போமானால்,
1900 களின் ஆரம்பத்தில் இலங்கையில் இந்திய எதிர்ப்பு அலைகளை எழத்தொடங்கியிருந்தன. இலங்கை, இந்தியர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தியது. மேலும் அவர்களை நாட்டைவிட்டு வெளியேறும் படி நிர்பந்தித்து வந்தது. இதனால் தோட்டப்புரங்களிலும் கொழும்பிலும் பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளி தமிழ் மற்றும் மலையாளிகள் பல இன்னகளுக்கு முகங்கொடுத்து வந்தனர்.
இலங்கை இந்திய காங்கிரஸ்
1939ஆம் ஆண்டுகளின் பின்னர், மலையகத் தமிழர்களை நாடுகடத்தும் தீர்மானத்திற்கு எதிராக கொழும்பில் ஒன்று கூடிய இந்திய சங்கங்களின் பிரதிநிதிகள் இவ்விடயத்தை இந்திய தேசிய காங்கிரசிடமும் மகாத்மா காந்தியிடமும் கொண்டு செல்வதாக தீர்மானித்தனர். அப்போது இலங்கை அரசவை பிரதிந்திகளாக இருந்த வைத்தியலிங்கம், பெரெய்ரா என்ற இருவரும் இந்தியா சென்று காந்தியை சந்த்தித்தனர். காந்தி தனது விசேட பிரதிநிதியாக ஜவகர்லால் நேருவை இலங்கைக்கு அனுப்பிவைத்தார். ஜுலை 18 1939 இல் நேரு கொழும்பு வந்தார். அவர் அப்போதைய அரசவை தலைவர் டி. எஸ். சேனநாயக்காவையும் சில அமைச்சர்களையும் சந்தித்து பேச்சு நடத்தினார். பேச்சுக்கள் பலனற்றுப் போகவே, நேரு இந்திய வம்சாவளியினரின் பிரதிந்திகளை சந்தித்து அவர்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய தேவையை உணர்த்தினார்.
நேரு, இந்திய தேசிய காங்கிரசை போன்று இலங்கையில் இலங்கை இந்திய காங்கிரஸ் (இ.இ.கா.) என்ற அமைப்பை உருவாக்கியதை அடுத்து, பின்னர் ஜுலை 25 இலங்கை இந்திய காங்கிரஸ் உருவானது.
1940 ஆம் ஆண்டு கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமானும், அமரர். கே. இராஜலிங்கவும் இணைந்து காங்கிரஸின் முதலாவது மாநாட்டை கம்பளையில் நடத்தினர். நிர்வாக சபையும் தெரிவுசெய்யப்பட்டது.
இதன்படி தலைவராக தொண்டமானும், பொதுச்செயலாளராக ராஜலிங்கவும் செயற்பட்டனர். காலப்போக்கில் இலங்கை, இந்திய காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என பெயர் மாற்றம் பெற்றது.
முக்கிய தொழிற்சங்க தளபதிகளான, தொழிற்சங்க துறவி என போற்றப்படும் வெள்ளையன், வீடற்றவன் நாவல் தந்த சி.வி. வேலுபிள்ளை, அசீஸ் போன்றவர்களால் இ.தொ.கா வேகத்தில் வளர்ச்சி கண்டது.
எவ்வாறிருப்பினும், தொழிற்சங்கத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, 1954 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து வெளியேறினார் அஸீஸ். இலங்கை ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் எனும் புதிய தொழிற் சங்கத்தையும் உருவாக்கினார்.
பின்னர் தொண்டமான் அணியிலிருந்த அமரர். வெள்ளையனும் கொள்கை ரீதியிலான முரண்பாடு காரணமாக பிரிந்துசென்று, தொழிலாளர் தேசிய சங்கத்தை அமைத்தார். சி.வி. வேலுபிள்ளையும் அதில் இணைந்தார்.
இவ்வாறாக மலையக தொழிற்சங்க வரலாற்றில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் என்பன உருவாகின.
லங்கா சமசமாஜக் கட்சி
1935 டிசம்பர் 18 இல் இலங்கையின் விடுதலை, மற்றும் சோசலிசத்தைக் கொண்டு வரும் முயற்சியாக அன்றைய சிங்கள இளைஞர்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்டது லங்கா சமசமாஜக் கட்சி. அன்றைய முக்கிய தலைவர்களாக இருந்தவர்கள் எஸ். ஏ. விக்கிரமசிங்க, என். எம். பெரேரா, பிலிப் குணவர்தன ஆகியோர் ஆவர். 1940களில் நாட்டின் முக்கிய அரசியல் சக்தியாக உருவானது. 1964 ஆம் ஆண்டின் அரசாங்கத்தில் கூட்டணிக் கட்சியாக இது இருந்தது. 1970களில் இது இலங்கை அரசியலில் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தது. பின்னர் அடுத்த 30 ஆண்டுகளில் இக்கட்சியின் செல்வாக்குச் சரியத் தொடங்கியது.
நவ சமசமாஜக் கட்சி
லங்கா சமசமாஜக் கட்சியில் இருந்து வெளியேறிய அதிருப்தியாளர்களான விக்கிரமபாகு கருணாரத்ன, சுமனசிறி லியனகே போன்றவர்களினால் உருவாக்கப்பட்டது நவ சமசமாஜக் கட்சி. சிரிதுங்க ஜெயசூரிய, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் பின்னர் அதில் இணைந்து கொண்டனர். 1976 ஆம் ஆண்டில் லங்கா சமசமாஜக் கட்சி அரசுக் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்ட போது அப்திருப்தியாளர்கள் பலர் வெளியேறினர். 1977 டிசம்பரில் நவ சமசமாஜக் கட்சி என்ற பெயரை தமது கட்சிக்கு சூட்டினர்.
அரசியலும் – தொழிற்சங்கங்களின் வீழ்ச்சியும்
சுதந்திரத்திற்கு முன்னர் இலங்கையில் தொழிற்சங்கங்கள் பலம்பெற்றிருந்தபோதும், அதன் பின்னரான காலப்பகுதியில் அவற்றின் செல்வாக்கு சரியத் தொடங்கியது என்பதை கடந்தகால வரலாறு எடுத்தியம்புகின்றது. தொழிற்சங்கங்கள் அரசியல் மயப்படுத்தப்படவேண்டியமை காலத்தின் தேவையாக இருந்தபோதும், பிரதான அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்துக்கு உட்பட்டமையினால், தொழிற்சங்கங்கள் இன்று பலமிலக்கும் நிலையை எதிர்நோக்குகின்றன.
நாடு வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றுள்ளபோதிலும், தொழிலாளர் உரிமைகள் விடயத்தில் மாறிமாறிவரும் ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமல் தொழிலாளர்களின் வாழ்வு போராட்டத்துடனேயே நகர்கின்றது.
எனவே, இன்றைய நிலையில், தொழிற்சங்கங்கள் தங்களின் தொழிற்சங்க பலத்தை மட்டுமல்லாது அரசியல் பலத்தையும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
அரசியல்மயமான சர்வதேச தொழிலாளர் தினம்
இன்றைய காலகட்டத்தில் தொழிற்சங்கங்கள் பல்வேறாக பல்கிப்பெருகி காணப்படுகின்ற போதும் அவற்றின் ஒன்றிணைவு என்பது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. சர்வதேச தொழிலாளர் தினமான மே முதலாம் திகதி மாத்திரம் அவர்கள் பெருவாரியான போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
அதிலும் அந்த மேதின போராட்டங்கள் என்பது அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளாக மட்டுமே இலங்கையில் மாறி வருகின்றமை தொழிலாளர் வர்க்கத்தின் அவல நிலையாகும்.
தொழிலாளர் தினத்தன்று கூட பிரதான அரசியல் கட்சிகளும் ஏனைய சிறு சிறு அரசியல் கட்சிகளும் தங்களுடைய அரசியல் பலத்தை காட்டுவதற்காகவ மாபெரும் பேரணிகளை நடத்துகின்றன. ஆனால் தொழிலாளர்களின் பலத்தைக் கொண்ட தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு மேதின பேரணியைக்கூட நடத்த முடியாத அளவுக்கு இருக்கின்றமை இலங்கை தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்கு சாபக்கேடு என்றே கூறவேண்டும்.
புறக்கணிக்கப்படும் தொழிலாளர்கள்
இலங்கை சுதந்திர தின கொண்டாட்டங்களில் தொழிலாளர் வர்க்கத்தினரின் ஈடுபாடு என்பது மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் கணிசமாக பங்களிப்பை தொழிற்சங்கங்கள் வழங்கியுள்ளபோதும், பிரதான அரசியல் கட்சிகள் இன்று அவற்றை தங்களின் நலன்களுக்காக மாத்திரமே பயன்படுத்துகின்றன. குறிப்பாக தொழிற்சங்க பலத்தினால் அரசியலுக்கு பிரவேசித்துள்ள கட்சிகளை, மாறிமாறிவரும் அரசாங்கங்கள் தங்களின் ஆட்சியின் பங்காளர்களாக இணைத்துக்கொள்கின்றபோதும், தொழிலாளர்களுக்கோ அல்லது தொழிற்சங்கங்கத்தினருக்கோ சாதகமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவருகின்றன. இதுவே, தொழிலாளர்கள் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்காதமைக்கு பிரதான காரணமாகும்.
குறிப்பாக, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா நாளாந்த அடிப்படை வேதனத்திற்காக தொடர்ந்தும் போராடி வருகின்றனர். அதிபர் ஆசிரியர், மருத்துவர், தாதியர், அரச நிறைவேற்று அதிகாரிகள், தொடருந்து தொழிற்சங்கத்தினர் என பல தொழிற்சங்கத்தினரும் தங்களது வேதன உயர்வுக்காவும், தரமுயர்வுக்காகவும் போராடிவருகின்றனர்.
எனவே, அவர்களின் இந்த போராட்டங்களுக்கு தீர்வு கிடைத்தால் மாத்திரமே இலங்கை சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தின் கரங்களும் இணையும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
வேலைத்தளம்