கொழும்பு மாநாகரசபையின் 2A சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று (30) தொடக்கம் கடமையிலிருந்த தற்காலிகமாக விலகிக்கொள்ளவுள்ளதாக கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.
நேற்று (29) கொழும்பு நகரசபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரியிடம் இக்கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
பாரிய அச்சுறுத்தலுக்கு மத்தியில் பணியாற்றும் எமது ஊழியர்கள் PCR பரிசோதனையை கோரியிருந்த போதிலும் வெறும் முகக்கவசம் சுகாதார அதிகாரிகளுக்கு போதுமானது என்று டொக்டர் சமித்த ( தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர்) தெரிவித்துள்ளதுடன் நோய் அறிகுறி தோன்றிய பின்னர் பரிசோதனை செய்ய முடியும் என்று டொக்டர் விஜயமுனி (பிரதான சுகாதார வைத்திய அதிகாரி) தெரிவித்துள்ளார்.
எமக்கு தொற்று நோய் ஏற்படும் என்ற சந்தேகத்தில் நாம் கடுமையான மன அழுத்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளோம்.
கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை பிரதேசத்தில் இம்மாதம் 15ம் திகதி தொடக்கம் 26ம் திகதி வரையான குறுகிய காலப்பகுதியில் கொவிட்- 19 நோயாளிகள் 97 பேர் சந்தேகத்துக்குரிய 1300 பேர் வரை தனிமைப்படுத்தலுக்குட்படுத்திய பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வைத்திய அதிகாரிகள் தொற்றுக்குள்ளானால் கெழும்பு நகரில் 2A வைத்திய அதிகாரி பிரிவுற்குட்பட்ட அரசின் பிரதான விடயங்கள் அமைந்துள்ள கொழும்பு 1,11,12,, 13 மற்றும் 14 ஆகி பிரதேசங்களைச் சார்ந்த சுமார் 137,000 பயனாளிகள், அரச ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் மத்தியில் இந்நோய் பரவுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கின்றமையே இதற்கு காரணமாகும்.
அதனால் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக செயற்படும் நாம், நோய் தொற்றுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் உள்ளமையினால் இன்று தொடக்கம் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு எம்மை நாம் உட்படுத்திக்கொள்கிறோம் என்று இக்கடிதத்தினூடாக அறியத்தருகிறோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.