ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறையில் நிரந்தர தொழில்வாழ்வை பெண்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பதை ஊக்குவிப்பது தொடர்பான தேசிய மாநாடு
சர்வதேச பெண்கள் தினமான இன்று (08), ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறையில் பெண்களுக்கு நிரந்தர தொழில் வாழ்வை ஏற்படுத்திக்கொடுப்பதை ஊக்குவிப்பதற்கான தேசிய மாநாடு கொழும்பு, கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
சொலிடாரிட்டி சென்டர் ஶ்ரீலங்கா மற்றும் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இத்தேசிய மாநாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து சுற்றுலாத்துறையில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துதல், ஹோட்டல் துறையில் பணியாற்றும் பெண்கள் மீதான பாகுபாட்டை அகற்றி நேர்மறையான பார்வை மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்துவதன் அவசியம் ஆகிய விடயங்கள் தொடர்பில் குழுக்கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன.
கொழும்பு மாநாகரசபை ஆளுநர் ரோசி சேனாநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக இலங்கைக்கான பிரித்தானிய உயரஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
குறித்த கலந்துரையாடலின் இறுதி அவதானிப்பு மற்றும் ஆலோசனைகளை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் அம்பிகா சட்குணநாதனும் இறுதி உரையினை சொலிராட்டி சென்டர் ஶ்ரீலங்காவுக்கான திட்ட வதிவிடப்பிரதிநிதி அலென்சோ சூசன், கனடா, உலக பல்கலைக்கழக சேவைகள் நிறுவனத்தின் (WUSC) இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி எஸ்தர மெக்கின்டோஸ் ஆகியோர் வழங்கினர். அதனைத் தொடர்ந்து இரவு போஷன விருந்தும் நடைபெற்றது.