ஜப்பான் மற்றும் இஸ்ரேல் முதலான நாடுகளில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ள இடைத் தரகர்களுக்கு எவ்வித பணமும் செலுத்தத் தேவையில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் தொழில்வாய்ப்பை பெற்றவர்களுக்கு விமான பயணச் சீட்டுக்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் மற்றும் இஸ்ரேல் முதலான நாடுகளில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினதும், அரசாங்கத்தினதும் ஒரேயொரு தொழில் வழங்கும் நிறுவனம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமாகும்.
இஸ்ரேலில் தொழில்வாய்ப்புக்காக செல்பவர்கள் தமது பணிக்காலம் நிறைவுபெற்றதையடுத்து, உடனடியாக இலங்கைக்கு திரும்ப வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட பணிக்காலம் நிறைவடைந்த பின்னர் சட்டவிரோதமான முறையில் அங்கு தங்கியிருப்பதன் ஊடாக, ஏனைய இலங்கையர்களுக்கும் தொழில்வாய்ப்பு இல்லாது போகும்.
குறிப்பிட்ட கால எல்லைக்குள் பணியை நிறைவுசெய்து இலங்கைக்கு திரும்பியவர்களுக்கு, அந்;த நாட்டுக்கு மீண்டும் சென்று தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும்.
இந்த நிலையில், இஸ்ரேலில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.