பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டிசம்பர் முதலாம் திகதி 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக புகையிரத திணைக்கள ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
குறித்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை இன்று காலை (28) நடத்தவுள்ளதாக அறிவித்துள்ள புகையிரத திணைக்கள ஊழியர்கள் தொழிற்சங்கம், 4 விடயங்களை முன்வைத்தே இவ்வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.
புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான இடத்தை தனியாருக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அதனை திணைக்கள தொழிற்சங்கம் கடுமையாக எதிர்ப்பதாகவும் தொழிற்சங்கத்தின் அழைப்பாளர் ஜானக்க பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும் புகையிரத சேவைக்கு விதிகளுக்கு முரணாக ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இதுவரை ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியில் தொழிலாளர்கள் மட்டுமே இணைக்கப்பட்டனர் ஆனால் தற்போது ஏனைய பதவிகளுக்கும் அமைச்சரின் எண்ணத்திற்கேற்ப ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
புகையிரத திணைக்கள பொது முகாமையாளருக்கு மேலாக அபிவிருத்திக் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டு தொடக்கம் அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2017 வரவுசெலவு திட்டத்தில் இது மிக தெளிவாகியுள்ளது. இவற்றை வன்மையாக கண்டிப்பதுடன் இவற்றுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.