கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு, வாக்களிப்பதற்காக விசேட வாக்களிப்பு மத்திய நிலையத்தையோ அல்லது நடமாடும் வாக்களிப்பு நிலையத்தையோ நிறுவுவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அதன் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை இல்லாமல் போகும் என நாங்கள் முன்னர் எண்ணியிருந்தோம். ஆனால் தற்போது அந்த நிலைமை அதிகரிப்பதனால், வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவர்களுக்காக விசேட வாக்களிப்பு நிலையத்தையோ அல்லது நடமாடும் வாக்களிப்பு நிலையத்தையோ ஏற்படுத்தற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களோ அல்லது 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை சாதாரண வாக்களிப்பு நிலையத்திற்கு அழைப்பதற்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ளவர்களுக்கு, கட்டாயமாக வாக்குரிமை பெற்றுக்கொடுக்கப்படும். அந்த மையங்களில் வாக்களிப்பு நிலையங்கள் அமைப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாவிட்டால், தேர்தலை நடத்துவது சிக்கலானதாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு சுகாதார அதிகாரிகளிடம் தாம் கோரிக்கை விடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் கூறியுள்ளார்.