வருமான வரி செலுத்தாத தனியார் வகுப்பு ஆசிரியர்களை அடையாளங்காண்பதற்கான நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான தனியார் வகுப்பு ஆசிரியர்கள் அதிக வருமானம் ஈட்டியபோதிலும் வருமான வரி செலுத்துவதில்லை என்று திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் நந்துன் கமகே தெரிவித்துள்ளார்.
வரி எல்லையை மீறி வருமானமீட்டும் தனியார் வகுப்பு ஆசிரியர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கான வரிக்கான பத்திரங்கள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஒழுங்கான முறையில் வரி செலுத்தப்படாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை, விருப்பத்துடன் வருமான வரி செலுத்துவது தொடர்பில் தௌிவுபடுத்துவதற்கான விழிப்புணர்வு கருத்தரங்குகளை தனியார் வகுப்பு ஆசிரியர்களுக்காக நடத்துவதற்கும் செயற்றிட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதி பணிப்பாளர் நாயகம், தற்போது 80% மற்றும் 20% வீதமாக உள்ள மறைமுக வரிகள் மற்றும் வருமான வரி சதவீதங்களை 60%, 40% வீதமாக மாற்றியமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.