தபால் திணைக்களத்திற்கும், ஊழியர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வு எட்டப்படும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளதாக தபால் மற்றும் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நன்மைக்காக வகுத்துள்ள திட்டங்கள் தபால் திணைக்களத்திற்கோ, ஊழியர்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்தாது என்று பிரதமர் தெரிவித்தார் என்றும் நேற்று சந்தித்தபோது பிரதமர் தெரிவித்தாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் 48 மணி நேர வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ள நிலையில் இவ்விடயம் தொடர்பில் பிரதமரை சந்தித்து கலந்துரையாடியபோதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
சிலருடைய குறுகிய சுயநல நோக்கங்கள் காரணமாக மிகவும் அநீதியான முறையில் வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது என்று சுட்டிகாட்டிய அமைச்சர் கண்டி, நுவரெலியா மற்றும் நகரிலுள்ள பிரித்தானிய கால கட்டிடங்கள் நாட்டுக்கு வருமானம் ஈட்டும் நோக்குடன் சுற்றுலாத்துறைக்கு உள்வாங்க அரசாங்கம் யோசனை வழங்கியுள்ளதே தவிர இன்றும் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, தபால் ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்த போராட்டம் காரணமாக சுமார் ஆறு இலட்சம் வரையான தபால்கள் தேங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.