கிழக்கு மாகாண வீதி அதிகாரசபையில் தற்காலிகமாக பணியாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தலைமையில் நேற்றுமுன்தினம் (17) நடைபெற்றது.
கடந்த 5 வருடங்களாக தற்காலிக பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர்களுக்கு ஆளுநர் அலுவலகத்தில் வைத்து இந்நியமனங்கள் வழங்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்தில் நியமனங்கள் வழங்கும் போது பாகுபாடுடன் செயற்பட இடமளிக்கமாட்டேன். என்மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகவே ஜனாதிபதி என்னை கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்துள்ளார். அந்த நம்பிக்கை வீணாகும் வகையில் நான் நடந்துகொள்ளமாட்டேன். எவ்வித இன, மத பாகுபாடுகளுமின்றி மக்களுக்கு எனது சேவையை வழங்குவேன்.
வீதி அதிகாரசபையில் நியமனங்களை பெற்றுள்ள நீங்கள், அதனை சிறப்பாகவும் கண்ணியமாகவும் மதித்து செயற்படவேண்டும். சேவையில் இன, மத பாகுபாடு காட்டக்கூடாது. நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குபவர்களாக மாறவேண்டும். நீங்கள் பெற்றுக்கொண்ட நியமனத்தினூடாக மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவீர்கள் என்று நான் நம்புகிறேன் என்று இந்நிகழ்வில் உரையாற்றி கிழக்கு மாகாண ஆளுநர் கருத்து வௌியிட்டார்.