இலங்கை வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வழங்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் சிலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்ரேலின் டெல்அவிவி நகரில் உள்ள 320 இலங்கையர்கள் தாய்நாட்டுக்குத் தாம் தாய்நாடு திரும்ப வசதிகளை மேற்கொண்டு தருமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர்களில் 66 பேர் நோயாளர்கள் என்றும் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் இலங்கை வர தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் பலர் தொழில் ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில் வாடகைக்கு தற்போது வௌியில் தங்கியருப்பதாகவும் அதனால் பாரிய நிதிச்செலவு ஏற்படுவதனால் தம்மால் சமாளிக்க முடியாது உள்ளது என்றும் சிங்கள நாளிதழான லங்காதீபவுக்கு தொலைபேசியூடாக கருத்து தெரிவித்த நாலிக்கா பேருவலகே சுட்டிக்காட்டினார்.
டெல்அவிவி நகரில் சாதாரண சிறிய அறையொன்றுக்கு மாதாந்தம் ஒரு இலட்சத்து பத்தாயிரம் வரை செலவிட வேண்டியுள்ளது. அதற்கான பணம் இல்லாதவர்கள் இலங்கையில் இருந்து அந்த பணத்தை பெற்று வாடகை செலுத்துபவர்களும் உண்டு.
புற்றுநோயாளர்கள், சிரோஸிஸ் நோயாளர்கள், விசேட தேவையுடையவர்களும் தம்மிடையே உள்ளனர். எனினும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் இதுவரை எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் உட்பட இலங்கையில் பொறுப்புக் கூறும் நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தியள்ளேன். இம்மாதம் நிறைவுறுவதற்குள் நாடு திரும்புவதற்கான விமானமொன்றை அரசாங்கம் அனுப்பும் என நாம் எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
டெல்அவிவி நகரின் வொல்சன் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் உடுகம்பலகே நிலந்தி கருத்து தெரிவிக்கையில் கடந்த 8 மாதங்களாக தாம் நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.
சுகயீனம் காரணமாக அடிக்கடி வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியிருப்பதனால் அதிக பணம் செலவாவதாக தெரிவித்த அவர், அவசர நிலையாக கருதி தம்மை தாய்நாட்டுக்கு அழைப்பித்துக்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இறக்கும் முன்னர் தன்னை தாய்நாட்டுக்கு அழைத்துக்கொள்ளுமாறு புற்று நோய்க்காக சிகிச்சை பெற்றுவரும் திருமதி அனுஷா பிரியதர்ஷினி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மூலம்- லங்காதீப