முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கேள்விக்குறியாகியுள்ளது என்று ஊவா மாகாண அமைச்சரும் இ.தொ.கவின் உபதலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நேற்று (23) சௌமியபவனில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
வரப்பிரசாதங்களை புறக்கணிக்கும் வகையிலான இடைக்கால கூட்டு ஒப்பந்தத்தில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினர் கைச்சாத்திட்டுள்ளமையினால் இந்நிலைமை தோன்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஜோன் செனவிரத்ன தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க முதலாளிமார் சம்மேளனர் சம்மதிக்கவில்லை. குறைந்தது 800 ரூபா சம்பள உயர்வை வழங்குவது தொடர்பிலாவது பரிசீலிக்குமாறு நாம் தெரிவித்தோம் . இதனையும் மறுதலித்த முதலாளிமார் சம்மேளனம் தற்போது 700 ரூபா சம்பள உயர்வை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கமைய செயற்படுமானால் 3 நாட்கள் வேலைநாட்களாகவும் மிகுதி 3 நாட்கள் கம்பனி விருப்பத்திற்கமைய தொழில் வழங்கும் நாளாகவும் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தொழிலாளர் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
வேலைத்தளம்