கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்வதனை நிறுத்தி, அதன் செயற்பாடுகளை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டுவருமாறு கோரி தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்கின்றது.
துறைமுக சத்தியாக்கிரகத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை அசௌகரியப்படுத்தும் வகையில் வீதிகளை மறிக்கும் வகையில் போராட்டம் நடத்த வேண்டாம் எனத் தெரிவித்து துறைமுக ஊழியர்களுக்கு நீதிமன்ற உத்தரவொன்று இன்று பிற்பகல் பிறப்பிக்கப்பட்டது.
புதுக்கடை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை அறிவிப்பதற்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் சத்தியாக்கிரகம் நடைபெற்ற இடத்திற்கு சென்றனர்.
இதன்போது ஏற்பட்ட அமைதியின்மை துறைமுக தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் தலையீட்டில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
எவ்வாறாயினும், தொழிற்சங்கங்களுக்கு இன்னும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பான தீர்மானத்தை பொதுத்தேர்தலுக்கு முன்பு எழுத்து மூலம் அறிவிக்குமாறு தொழிற்சங்கங்கள் கோரி வருகின்றன.
குறித்த தொழிற்சங்க நடவடிக்கையில் சிவில் அமைப்புகளும் மேலும் சில தொழிற்சங்கங்களும் இணைந்துள்ளன.
துறைமுக அதிகார சபையின் தலைவருக்கும் தொழிற்சங்க தலைவர்களுக்குமிடையில் இன்று பகல் பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் அது தீர்வின்றி முடிவடைந்தது.
பகல் 12.40 அளவில் தேசிய தேரர்கள் முன்னணியின் மகா சங்கத்தினரும் இந்த சத்தியாக்கிரகத்திற்கு ஆசி வழங்கினர்.
சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர், சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக கொழும்பு துறைமுக வளாகத்திற்கு சென்றனர்.
பல்வேறு அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேரர்களும் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்படும் இடத்திற்கு சென்று துறைமுக ஊழியர்களுக்கு ஆதரவளித்தனர்.
நன்றி : Newsfirst.lk