தெஹிவலை மிருகக்காட்சிசாலை தொழிற்சங்கத்தினர் இன்று (28) முன்னெடுக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தெஹிவலை மிருகக்காட்சிசாலையை பிலியந்தல பிரதேசத்திற்கு கொண்டு செல்ல மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை தற்போது தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாட இணக்கம் தெரிவிக்கப்பட்டதையடுத்து இத்தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 31ம் திகதி சுற்றுலத்துறை அமைச்சின் செயலாளருக்கும் தெஹிவலை மிருகக்காட்சிசாலை தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெஹிவலை மிருகக்காட்சிசாலைக்கு ஆண்டுதோறும் 1.4 மில்லியன் பார்வையாளர்கள் வருகைத்தருகின்றனர். இதனூடாக வருடாந்தம் 175 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்படுகிறது.
மிருகக்காட்சிசாலையை தெஹிவலையில் இருந்து பிலியந்தல பிரதேசத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் ஆராய்வதற்கான நிபுணர்கள் குழுவொன்றை சுற்றுலத்துறை அமைச்சு நியமித்துள்ளதாகவும் குறித்த குழுவின் அறிக்கை எதிர்வரும் வாரங்களில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக த ஐலண்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
மிருகக்காட்சிசாலையை அமைப்பதற்கு பிலியந்தல பிரதேசத்தில் 70 ஏக்கர் நிலப்பரப்பு அடையாளங்காணப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் எஸ் ஹெட்டியாராய்ச்சியை மேற்கோள்காட்டி த ஐலண்ட் தெரிவித்துள்ளது.
மிருகங்களை மிகப் பொருத்தமான இடத்திற்கு மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதற்கமைய பிலியந்தல, கஹபொல பிரதேசத்திற்கு மாற்றுவது தொடர்பில் ஆராய்ப்படுகிறது என்று சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார் என்றும் அப்பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடுகளில் அடைக்கப்பட்ட மிருகங்களை பார்வையிடும் நடைமுறையை இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் அண்மையில் தாவரவியல் மற்றும் விலங்கியல் திணைக்களங்களுடனான கலந்துரையாடலில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.