வடக்கு கிழக்கில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றியோருக்கான நியமனங்கள் அடுத்த வாரம் வழங்கப்படவுள்ள நிலையில் நியமனம் பெறும் பெரும்பாலானவர்கள் ஐம்பது வயதை கடந்தவர்களாவர் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
நிரந்தர நியமனம் பெறுபவர்களுக்கான வயதெல்லை 45 ஆக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் தொண்டர் ஆசிரியர்களாக இருந்து நிரந்தர நியமனம் பெறுபவர்களுர’ நூற்றுக்கணக்கானவர்கள் ஐம்பது வயதைக் கடந்தவர்ள். சிலர் 52 வயதுடையவர்கள் என்று சுட்டிக்காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பயற்சி பெறாதவர்கள் கல்வித்துறையில் இருப்பது கல்வி வளர்ச்சிக்கு பெருந்தடையாக உள்ளது என்றும் கவலை வௌியிட்டுள்ளார்.
பயிற்சியில்லாத தொண்டர் ஆசிரியர்களை சேவையில் இணைக்க வேண்டாம் என்று தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆசிரியர் செல்வாக்கினூடாகவே இந்நியமனங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த 2015ம் ஆண்டு நடத்தப்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டவர்களை சேவையில் இணைப்பதற்கு அனுமதி கோரியே அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதியும் பெறப்பட்டது. அவ்வாறு அமைச்சரவைக்கு கூறப்பட்ட விடயம் உண்மையாயின் 2015ம் ஆண்டு வழங்கப்பட்ட பட்டியலில் தற்போது நியமனம் வழங்கப்படும் அனைவரினது பெயரும் இருக்கவேண்டும். அப்பட்டியல் எம்மிடம் உள்ளது. ஆனால் தற்போது நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டவர்களில் 50 வீதத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் புதிதாக அரசியல் செல்வாக்கினூடாக இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்நியமனத்தினூடாக எதிர்காலத்தில் ஏற்படும் அத்தனை பிரச்சினைகளுக்கும் நியமனம் வழங்கும் அதிகாரிகளும் அரசாங்கமும் பொறுப்பு கூறவேண்டும். இத்தகைய செயற்பாடுகள் நிச்சயமாக ஆசிரியர் தரத்தை குறைக்கும். இந்நியமனத்தை பெறுபவர்கள் ஆசிரியர் சேவையின் மகத்துவத்தை அறிந்துகொள்ள முன்னமே ஓய்வு பெற்றுவிடுவார்கள் என்று ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.