தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகவும், உரிய தகைமைகள், ஆவணங்களை கொண்டிருந்த போதும் தாம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் 25 பேர் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக கலந்துரையாடல் ஓன்றினை மேற்கொள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் வவுனியா இணைப்பாளரும் சட்டத்தரணியுமான லீனஸ் வசந்தராஜா தெரிவித்தார்.
யுத்த காலப்பகுதியிலும் அதனை அண்டிய காலப்பகுதியில் நீண்டகாலமாக தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றிய தாம் வலய மட்டத்திலும், மாகாண, மத்திய அரசாங்கத்தினாலும் நடத்தப்பட்ட பல நேர்முகத் தேர்வுகளில் தோற்றியிருந்த போதும் கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் வவுனியா தெற்கு வலய தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நியமனத்திலும் அரசியல் தலையீடு காரணமாக சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நீண்டகாலம் கற்பித்து வரும் தாம் கோரப்பட்ட தகமைகள், ஆவணங்கள் இருந்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், கோரப்பட்ட தகமைகள் மற்றும் ஆவணங்களை கொண்டிராத சிலர் உள்ளவாங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த நேர்முகத் தேர்வில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தாம் கருதுவதாகவும் தெரிவித்து பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் சார்பாக ஒக்டோபர் 6 ஆம் திகதி வவுனியா மனிதவ ரிமைகள் ஆணைக்குழுவில் 25 பேர் முறைப்பாடு செய்திருந்தனர்.
இது தொடர்பில் தீர்வு காணும் வகையில் எதிர்வரும் 10 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் ஓன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடலுக்கு வடமாகாண ஆளுனரின் செயலாளர், வட மாகாண முதலமைச்சரின் செயலாளர், வட மாகாண கல்வி அமைச்சரின் செயலாளர் ஆகியோரை தவறாது கலந்து கொள்ளுமாறு கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் முறைப்பாடாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.