மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டங்களை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் பழனி. திகாம்பரம் எதிர்வரும் 6ஆம் திகதி தலவாக்கலையில் நடைபெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தின் பின்னர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
நடைபெறும் போராட்டங்கள் தொடர்பில் தோட்ட தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் தேசிய சங்க தலைவர்கள், மாதரணிகள், அமைப்பாளர்களுக்கு தெளிவூட்டும் பொதுகூட்டம் ஹட்டன் டீ.கே.டபிள்யூ கலாச்சார மண்டபத்தில் இன்று (02) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூறியதாவது,
தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை வைத்து தொழிலாளர் தேசிய சங்க அங்கத்தவர்களை எமது சங்கத்துக்கு எதிராக தூண்டிவிட்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட மாற்று கட்சிகள் தம் விரலால் தமது கண்ணையே குத்திவிடும் செயலில் ஈடுப்பட்டு வருகின்றது.
கூட்டு ஒப்பந்தமானது அமைச்சுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் ஏற்படுத்திக் கொள்ளும் ஒன்றல்ல. ஆனால் கூட்டு உடன்படிக்கைக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. காரணம் கூட்டு கமிட்டியில் தொழிலாளர் தேசிய சங்கம் இல்லை. நாம் ஏற்கனவே விழகி விட்டோம்.
இருந்தும் நடைபெற்று வரும் தொழிலாளர் போராட்டங்களுக்கு முழுமையான ஆதரவை தொழிலாளர் தேசிய சங்கம் வழங்கும். இருந்தபோதும் போராட்டத்தை தூண்டி விட்டு கொழும்புக்கும் இந்தியாவுக்கும் செல்பவர்கள் நாம் அல்ல.
காலத்திற்கு காலம் இந்த சம்பள பிரச்சினையை வைத்துக்கொண்டு கையாளாகாத தனத்தில் ஒவ்வொரு முறையும் பொய் கூறிக் கொண்டே கடைசி நேரத்தில் போராட்டத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
தொழிலாளர்கள் சம்பள உயர்வில் மற்றும் பெற்றுக்கொடுத்த 2500 ரூபாய் தொடர்பிலும் நாம் எந்தவொரு இடத்திலும் கையொப்பம் இடவில்லை. 2500 ரூபாய் இடைக்கால கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கத்திடம் கடனை பெற்றுக்கொள்வதற்காக முதலாளிமார் சம்மேளனம் அரசாங்கத்திடம் உடன்படிக்கையை மேற்கொண்டதை வெறுமனே நாங்கள் கையொப்பம் இட்டோம் என கூறிக்கொண்டு திரிகின்றார்கள்.
புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சம்பளம் தருவதாக கூறும் முதலாளிமார் சம்மேளனம் நாளொன்றுக்கு 500 ரூபாய் அடிப்படை சம்பளமாகவும், மேலதிக கொடுப்பனவுகளாக இணைத்து 730 ரூபா வழங்குவதாக கூறுகின்றதாம்.
ஆனால் இத்தொகை பெண்களுக்கு மாத்திரம் என சொல்வதில் என்ன நியாயம். 10 முறை தோல்வி கண்ட பேச்சுவார்த்தை தொடர்பில் மலையகத்தின் ஏனைய தொழிற்சங்கங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தெளிவுப்படுத்த வேண்டும்.
அதற்காக சிலர் தொழிலாளர்களை தூண்டிவிட்டு அமைச்சு பதவியை கையேற்க இப்போராட்டத்தை சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
போராட்ட வடிவம் சம்பள உயர்வுக்காக அமைய வேண்டும். கூட்டு உடன்படிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றையும் நான் கொண்டு வரவுள்ளேன்.
தேயிலை விலை மற்றும் உரிய நேரத்தில் சம்பளத்தை நாமே பெற்றுக்கொடுப்போம், இடைக்கால கொடுப்பனவு சம்பள உயர்வுக்கு தடையாக அமைகின்றது என்றால் நொண்டி சாக்கு சொல்லும் இவர்கள் திடீர் போராட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளனர்.
இன்று மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள். இந்த அரசாங்கத்தில் 7பேர்ச் காணி உரிமை, தனிவீட்டு உரிமை கிடைக்கின்றது.
திடீர் போராட்டத்தின் ஊடாக பெற்றுத் தருவதாக கூறிய 1000 ரூபாயை பெற்றுக்கொடுத்தால் அவர்களுக்கு மலர் மாலை அணிவிக்கின்றேன். கம்பனி நிர்வாகம் இலாபம் அடையும் போது சொல்லாத வார்த்தைகளை இப்பாழுது சம்பன உயர்வின் போது நட்டம் என சொல்லுவதும் தொழிலாளர்களின் உழைப்பில் தோட்ட அதிகாரிமார்கள் மற்றும் கம்பனி நிர்வாக அதிகாரிகள் சுபபோக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கு எல்லாம் முடிவு கட்டுவதற்காக அமைச்சராகிய நான் மக்கள் பிரதிநிதியாக தலவாக்கலையில் பாரிய போராட்டம் ஒன்றை மேற்கொள்ளப் போகின்றேன் என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
அத தெரண