தொழில் உலகில் பணியில் ஈடுபடும் ஆண் மற்றும் பெண்களுக்கு எதிராாக நடைபெறும் பல்வேறு வகையான துன்புறுத்தல்கள், வன்முறைகளில் இருந்து அவர்களை பாதுகாப்பதை நோக்காக கொண்டு உலக தொழிலாளர் அமைப்பானது ஏனைய சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து விசேட பிரகடனமொன்றை நடைமுறைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
குறித்த பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதற்காக எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலக தொழிலாளர் அமைப்பின் 107வது அமர்வில் கலந்துரையாடப்படவுள்ளது. அதனூடாக தொழில் உலகில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண்களுக்கு உடல், உள மற்றும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பை பெற்றுகொடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் தொழில் உலகில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண்கள் பாலியல் வேறுபாடுகளின்றி பல்வேறு துஷ்பிரயோகங்களுக்குள்ளாகி வருகின்றமை மறுக்க முடியாது. இந்நிலையில் அவர்களின் பாதுகாப்புக்கு இத்தகைய பிரகடனம் அத்தியவசியமாகியுள்ளதுடன் அதற்கு ஆதரவு வழங்குவதும் இலங்கையரான எமது கடமையாகும்.
அந்நோக்கை நிறைவேற்ற ‘தொழில் உலகில் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான அமைப்பின்’ ஊடாக சமூக மற்றும் ஊழியர்களை தௌிவுபடுத்தும் நிகழ்வு அண்மையில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
இவ்வமைப்பினூடாக சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை பிரதிநிதிகளுக்கு குறித்த பிரகடனத்திற்கு ஆதரவு தெரிவித்த மகஜர் ஒன்று எதிர்காலத்தில் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பிரகடனத்திற்கு பல்வேறு பிரதேச தொழிலாளர் ஆதரவு தெரிவித்து நடைபவனி மேற்கொண்ட புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.