தோட்டத் தொழிலாளர் எதிர்பார்த்த மாற்றம் கடந்த 2015ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என்று மலையக தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
தொழிலாளர்கள் விடயத்தில் இம்மாதம் 10ம் திகதி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் இந்தத் தேர்தலின் தாக்கம் எவ்வாறுள்ளது என்பது தொடர்பிலும், தொழிற்சங்க பிரமுகர்களிடமும், தொழிலாளர்களிடமும் ‘வேலைத்தளம்’ நேர்காணலை மேற்கொள்கின்றது. இதன்போதே கணபதி கனகராஜ் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
செவ்வி வருமாறு,
கேள்வி – நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?
பதில் – மக்கள் மாற்றமொன்றை எதிர்பார்ப்பார்த்து, கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில்; வாக்களித்தனர். ஆனால், மக்கள் எதிர்பார்த்த மாற்றம் தேர்தலின் பின்னர் ஏற்படவில்லை.
குறிப்பாக மலையகத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அபிவிருத்திகள் தொடர்ந்து இடம்பெறவில்லை. மலையக மக்களுக்கு வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றபோதும், வாக்குறுதி வழங்கியதைப்போல அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
கேள்வி – தேர்தலின் பின்னர் எவ்வாறான மாற்றம் நிகழ வேண்டும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?
பதில் – தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை சம்பள உயர்வு என்பதுதான் அவர்களின் பிரதான பிரச்சினையாக உள்ளது. கடந்த முறை சம்பள உயர்வுக்கான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின்போது, தொழிற்சங்க தரப்பினரைவிட, தோட்ட நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அரசாங்கத் தரப்பிலிருந்து தோட்ட நிறுவனங்களுக்கு ஆதரவு கிடைத்தது. இதன்காரணமாக தொழிலாளர்கள் எதிர்பார்த்ததைவிட, குறைந்த சம்பள நிர்ணயமொன்றை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
கேள்வி – தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் தொழிலாளர் ரீதியாக உங்களுடைய எதிர்ப்பார்ப்பு என்ன?
பதில் – தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக செயற்படும்போது, தொழிற்சங்க பலத்துடன் அரசியல் பலமும் அவசியமாகும். இந்தத் தேர்தலின் ஊடாக அரசியல் பலம் கிடைத்துள்ளது.
இதனூடாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் எதிர்காலத்தில் திறம்பட செயற்பட முடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.