மலையக பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு 2158 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கவுள்ளதாக அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
தான் இராஜாங்க அமைச்சராக இருந்த சந்தர்ப்பத்தில் இந்நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுத்ததாகவும் தற்போது குறித்த நியமனங்களை வழங்குவதற்கான அனுமதியை பெறுவதற்கான பத்திரத்தை கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார் என்றும் வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில தினங்களில் அமைச்சரவை அனுமதி கிடைத்ததும் பெருந்தோட்டப் பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். கடந்த 2015ம் ஆண்டு ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட 3126 பேர் ஆசிரியர் கலாசாலைகளில் கட்டம் கட்டமாக பயிற்சிகளை பூர்த்தி செய்து தற்போது பாடசாலைகளில் பணியாற்றுகின்றனர். அவர்களை ஆசிரியர் தரத்திற்கு உள்வாங்கவேண்டிய தேவையுள்ளது. அவர்களுக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. அதனால் சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இது தொடர்பில் அவர்கள் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மாகாணச் செயலாளர்கள் தான் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாகாணசபை மேலதிக செயலாளர்களை தொடர்புகொண்டு கோரியுள்ளேன். மாகாணசபைகள் கலைக்கப்பட்டிருப்பது இவ்விடயத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மாகாண ஆளுநர் மற்றும் மாகாணசபை நிர்வாக பிரதான செயலாளர் ஆகியோருக்கு இவ்விடயம் உரியது என்றும் அமைச்சர் இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்தார்.