
பெருந்தோட்டத்துறை அபிவிருத்திக்காக தங்கள் சேவைக்காலம் முழுவதும் பணியாற்றுகின்றபோதும், ஓய்வின் பின்னர் தங்களின் உத்தியோகபூர்வ இருப்பிடத்தைவிட்டு வெளியேற்றப்படும் தோட்ட பணிக்குழு ஊழியர்களுக்காக வீடமைப்பதற்கான காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தோட்ட பணிக்குழு ஊழியர்களுக்கு வீடொன்றை அமைத்துக்கொள்வதற்கான காணி உரிமைப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு கொழும்பு மஹாநாம வித்தியாலயத்தில், அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
தோட்ட அபிருத்தி சபையின் பிரதான காரியாலயம், பிரதேச காரியாலயம் மற்றும் ஜனவசம தோட்டங்களின் ஊடாக நிர்வகிக்கப்படும் தோட்டங்களில் 5 ஆண்டுகள் சேவையாற்றியுள்ள தோட்ட பணிக்குழு ஊழியர்களுக்கு காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் நாத் அமசிங்க, தோட்ட பணிக்குழு ஊழியர்களுக்காக காணி உரிமையைப் பெற்றுக்கொள்வதென்பது தமது சங்கத்தின் நீண்டகால போராட்டமாகும் என தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர்கள் ஆகியோருடன், பெருந்தோட்;ட பணிக்குழு ஊழியர்களுக்கு வீடொன்றை அமைப்பதற்கான காணியைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இது மிகவும் மனிதாபிமானமிக்க கோரிக்கையாகும். ஏனெனில், தங்களது வாழ்நாள் முழுவதும் பெருந்தோட்டத்துறை முன்னேற்றத்திற்காகவும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படும் பெருமளவான தோட்ட பணிக்குழு அதிகாரிகள், தாங்கள் ஓய்வுபெறும்போது, தங்களது உத்தியோகபூர்வ இல்லத்தை தோட்ட நிர்வாகத்திடம் கையளித்துவிட்டு வீதிக்கு செல்லவேண்டிய நிலையே ஏற்படுகிறது.
இதன் காரணமாக, தோட்ட பணிக்குழு ஊழியர்களுக்கு வீடொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் தொடர்ச்சியாக போராடியது.
இந்த நிலையில், அதற்கான காணியைப் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நடவடிக்கை எடுத்திருந்தார்.
2020 ஆம் ஆண்டாகும்போது, 100 ஆண்டுகள் பழமையான தொழிற்சங்கமாக இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் இருக்கும். இந்த நிலையில், சங்கத்தின் 100ஆவது பிறந்ததினத்திற்கு கிடைக்கும் பரிசாக இந்த காணி உரிமைப்பத்திரங்களைப் பெற்றுக்கொடுள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் நாத் அமசிங்க தெரிவித்துள்ளார்.