ஒவ்வொரு 4.5 நாட்களுக்கு ஒரு தடவை ஊடகவியலாளர் ஒருவர் கொலை செய்யப்படுகிறார் என்ற அதிர்ச்சித் தகவலை யுனெஸ்கோ வௌியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் கொலை செய்வது தொடர்பில் மேற்கொண்ட ஆய்வில் இத்தவல் வௌிவந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாய்விற்கமைய கடந்த 10 வருடங்களில் 827 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியா, ஈராக், யேமன், லிபியா ஆகிய நாடுகளிலேயே அதிக எண்ணிக்கையான ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அடுத்ததாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படுகின்றனர்.
2006- 2015 வரையான காலப்பகுதியில் யுத்தச்சூழல் காணப்படும் நாடுகளில் 50 வீதமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட காலப்பகுதியில் 213 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் 78 பேர் அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இதேவேளை மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் ஊடகவியலாளர்களின் உயிருக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதுவரை 11 பேர் அந்நாடுகளில் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் யுனெஸ்கோ சுட்டிக்காட்டியுள்ளது.
உள்நாட்டு ஊடகவியலாளர்களுக்கே ஆபத்து அதிகம் என்ற போதிலும் இது வரை 9 வௌிநாட்டவர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அதிகமாக ஆண் பத்திரிகையாளர்களே கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அதில் ஒன்லைன் பத்திரிகையாளர்களும் உள்ளடங்குவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சிரியாவில் அதிகமாக வலைப்பூ (ப்ளொக்) எழுத்தாளர்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள் என்றும் யுனெஸ்கோ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.