நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் உரிய சுகாதார விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறனவா என்பதை அவதானிப்பதற்காக சிவில் உடையில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு ஒலிப்பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது,
கொழும்புஇ கம்பஹா மாவட்டங்களில் 24 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் உள்ள மக்கள் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை கடைப்பிடிக்கின்றார்களா? என்பதை கண்டறிவதற்காக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெருமளவானோர் சட்டவிதிகளை கடைப்பிடிக்கின்ற போதிலும்இ சிலர் மாத்திரம் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படுகின்றனர். அவ்வாறானவர்களை கைது செய்வதற்காக தொடர்ந்தும் ட்ரோன் கெமராக்கள் ஊடாக சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கமைய தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய 117 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் நேற்று முன்தினம் மாத்திரம் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றங்களுக்காக இதுவரையில் 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினரின் உதவியுடன் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவுறுத்தல்களுக்கமைய செயற்படுகின்றனவா என்பது தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது பிரதானமாக மூன்று விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளன. அதற்கமைய குறித்த நிறுவனம் அல்லது அலுவலகத்திற்கு முன்னால் கைகளை கழுவுதற்கான வசதிகள் ஏற்பாடு, வருகைத்தரும் நபர்களின் உடல் வெப்ப நிலையை கண்டறிவதற்கான வசதிகள், வருகைத்தரும் நபர்கள் தொடர்பான விபரங்களை பதிவுச் செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பிலுமே விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. இது தொடர்பான சோதனை நடவடிக்கைகளுக்காக சிவில் உடையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மட்டுமன்றி நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வசித்து வரும் அனைவரும் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக உரிய சுகாதார சட்டவிதிகளை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும். இந்நிலையில் அத்தியாவசிய தேவையின்றி வெளி பிரதேசங்களுக்கு செல்வதையும் அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மூலம் : வீரகேசரி