ஓய்வூதிய முரண்பாடுகளை சரிசெய்யப்பட்டு சுமார் அரை மில்லியனுக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுடைய நிலுவைத் ஓய்வூதியத் தொகை எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி வழங்கப்படும் என்று அரச நிருவாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
அதற்கமைய நவம்பர் 8ம் திகதி ஐந்து மாத நிலுவைத் தொகை வழங்கப்படவுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே 95 வீத ஓய்வூதிய முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளன. நிலுவைத் தொகை அடுத்த மாதம் முதல் வழங்கப்படும். 500,000 மேற்பட்ட விண்ணப்பங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. வௌ்ளம் காரணமாக காணாமல் போனதுடன் சிதைவடைந்துள்ள விண்ணப்பங்களினாலேயே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அப்பிரச்சினைகளும் நவம்பரில் தீர்க்கப்படும். புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி ஓய்வுபெற்ற முகாமைத்துவ உதவியாளர்கள் தரம் 1 இன் சம்பளம் 5,200 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஆசிரியர் தரம் 1 இன் சம்பளம் 9,200 ரூபாவினாலும் ஓய்வு பெற்ற தாதியின் சம்பளம் 9,200 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகரின் சம்பளம் 4200 ரூபாவாலும் சிரேஸ்ட நிர்வாக அதிகாரியின் சம்பளம் 16,000 ரூபாவினாலும் 2015 டிசம்பர் 31 திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்ற அமைச்சின் செயலாளரின் சம்பளம் 20,000 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இல 05/ 2015 சுற்றுநிருபத்திற்கமைய அதிகரிக்கப்பட்ட ஓய்வு பெற்றோரின் இடைக்கால கொடுப்பனவு 3500 ரூபாவும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும், அனைத்து ஓய்வுபெற்றோரும் வாழ்க்கை செலவுக்கான கொடுப்பனவு 3,525 ரூபாவை பெறவும் தகுதியுடையவராகின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
2015 டிசம்பர் 31 இற்கு முன்பு ஓய்வு பெற்ற 500,000 இற்கும் அதிகமான அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது. மேற்கூறப்பட்ட காலப்பகுதிக்கு முன்னர் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுடைய ஓய்வூதிய சம்பளமானது 2,800 ரூபா தொடக்கம் 20,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரு வேறு சுற்றுநிரூபங்கள் காரணமாக 2015 டிசம்பர் 31 இற்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கும் அதன் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்குமான ஓய்வூதிய சம்பளத்திலேயே இம்முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 2015 டிசம்பர் 31 முன்னர் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களின் ஓய்வூதியம் 05/2015 சுற்றுநிரூபத்திற்கு கீழும் அதற்கு பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் 03/2016 கீழும் வழங்கப்படுகிறது.
அதற்கமைய 31.12.2015 அன்று அல்லது அதற்கு முன்னர் ஓய்வு பெற்ற அலுவலக அலுவல் உதவியாளர் தரம் ஒன்றின் சம்பளம் ரூ .2,800 ஆல் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..