மேன்முறையீடு செய்து மீண்டும் நேர்முகத்தேர்வில் தோற்றியவர்களுக்கு உடனடியாக நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கிழக்கு மாகாண ஆளுநருக்கு பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் மகஜர் ஒன்றை நேற்று (30) கையளித்தனர்.
பாதிக்கப்பட்ட 24 தொண்டர் ஆசிரியர்களே இவ்வாறு மகஜர் கையளித்தனர்.
நிரந்தர நியமனம் பெறுவதற்கான தகமையிருந்த போதிலும் தாம் தெரிவாகவில்லை என்று மகஜரில் தொண்டர் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப்பரீட்சைக்கு தோற்றியிருந்தோம். ஆனால் நாம் தெரிவாகவில்லை. இதனை ஆட்சேபித்து மேன்முறையீடு செய்திருந்தோம். எமது மேன்முறையீட்டை கிழக்கு மாகாண பேரவைச் செயலகம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. பின்னர் மே மாதம் 30ம் திகதி மறுபடியும் நேர்முகத்தேர்வுக்கு அழைத்திருந்தது. இதன்போது சுமார் 400 பேரின் மேன்முறையீடு பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டிருந்தது. இதில் 24 தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனத்திற்கு தகுதியானவர்கள் என்று சிபாரிசு செய்யப்பட்டு கல்வியமைச்சுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
எனவே, தகுதியிருந்தும் நிரந்தர நியமனம் கிடைக்கப்பெறாத எமது நியமனத்தை துரிதப்படுத்தவும் என்று தாம் கோருவதாக ஆளுநருக்கு கையளிக்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட் தொண்டர் ஆசிரியர்களுக்கு கடந்தவாரம் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.