இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு புதிதாக 1500 பேரை இணைத்துக்கொள்வதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்று ரயில் ஊழியர்கள் சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சுமார் ஐந்து வருட காலமாக திணைக்களத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் தற்காலிக பணி அடிப்படையிலும் பணியாற்றும் 1500 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமது ஒன்றியம் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்து வந்தபோதும் அதனை கவனத்திற்கொள்ளாத அமைச்சர் தனது அரசியல் ஆதரவாளர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என்று ஒன்றியத்தின் பொது அமைப்பாளர் எஸ். பீ விதானகே தெரிவித்துள்ளார்
ஏற்கனவே நிரந்தர நியமனமற்ற ஊழியர்கள் திணைக்களத்தில் பணிபுரியும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான நியமனங்களை வழங்காது புதியவர்களை சேவையில் இணைத்துக்கொள்வது மனித உரிமை மீறல் என்று சுட்டிக்காட்டிய எஸ்.பீ விதானகே, ஏற்கனவே புதிதாக ஊழியர்களை இணைத்துக்கொள்வதற்கான பெயர்களை அனுப்புமாறு அமைச்சர் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரியுள்ளார் என்றும் தமக்கு அறியக்கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னால் போக்குவரத்துத்துறை அமைச்சரான குமார வெல்கம மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின் சேவைக்காலங்களில் மேற்கூறப்பட்ட நிரந்தர நியமனம் பெறாத 1500 ஊழியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.