போட்டிப்பரீட்சைகள் நடத்தி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதை நிறுத்துமாறு வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.
வட மாகாண சுகாதார அமைச்சரை அண்மையில் சந்தித்த போதே அவர்கள் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அமைச்சரின் இணைப்பு செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது 399 பட்டதாரிகள் தொழிலின்றி இருப்பதாக இதன்போது சுட்டிக்காட்டிய வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள், தாம் தொடர்ச்சியாக 125 நாட்கள் போராட்டம் நடத்தியும் இதுவரை பலன் கிட்டவில்லையென்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லையென்றும் சுட்டிகாட்டினர்.
மேலும் மாகாணசபையிலுள்ள திணைக்களங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளை நியமிக்குமாறு கோரியுள்ள பிரதிநிதிகள், பல்கலைக்கழகத்தை விட்டு வௌியேறிய ஆண்டின் அடிப்படையிலும் மூப்பு அடிப்படையிலும் நியமனங்களை வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எதிர்கட்சித் தலைவரை சந்திப்பதற்கான வாய்ப்பை வழங்குமாறு பட்டதாரிகள் கோரினர்.
அத்துடன், மாகாணத்தில் நீடித்து நிலைக்கக்கூடிய பாரிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிப்பதனூடாகவே பட்டதாரிகளுக்கு வேலையில்லா பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் மாகாணங்களுக்கு நியமனம் வழங்கும் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மாகாண சுகாதார அமைச்சில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாகவும் அவற்றை நிரப்புவதற்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் இதுவரை அனுமதி வழங்கவில்லை என்றும் தெரிவித்த அமைச்சர், எதிர்கட்சித் தலைவருடன் கலந்துரையாடி சந்திப்பை ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.
இதன்போது, வவுனியா மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் அமைச்சரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.