இவ்வாண்டு ஆரம்பத்தில் இருந்து சுமார் 200 போலி வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் வௌிநாட்டு தொழில்வாய்ப்பை நாடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட திடீர் சுற்றிவளைப்புக்களில் இப்போலி வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் அடையாளங்காணப்பட்டதாக பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு ஆரம்பம் தொடக்கம் இதுவரை போலி வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தொடர்பில் சுமார் 1,384 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவ்வதிகாரி, இவ்வெண்ணிக்கையானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பை நாடும்போது பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்கும்போது கவனயீனத்தினால் பலர் பாதிக்கப்படுவதாகவும் அவ்வதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் சுமார் 13,000 பதிவு செய்யப்பட்ட வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் இயங்குகின்றன. மேலதிகமாக தரகர்கள் மூலமாக இயங்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களும் இயங்குகின்றன. இடைத்தரகர்கள் மூலமாக இயங்கும் முகவர் நிறுவனங்கள் நிரந்தரமாக ஓரிடத்தில் இருப்பதில்லை. நாட்டின் பல பாகங்களில் பின்தங்கிய பிரதேசங்களை குறிவைத்து இயங்கி பின்னர் வேறு இடங்களுக்கு மாற்றப்படுகின்றன. பதிவு செய்யப்பட்ட சுமார் 500 முகவர் நிலையங்கள் தற்போது இயக்கமின்றி உள்ளன. பணியகம் அவர்களின் செயற்பாடுகளை அவதானித்த வருகின்றது.
வீட்டுப்பணிக்காக செல்லும் பலர் சுற்றுலா வீஸாவில் சென்று பின்னர் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்கின்றனர். இது மிகவும் அபாயகரமானது. ஏதோவொரு விதத்தில் அவர்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் உரிய ஆவணங்கள் இன்மையினால் அடையாளங்காணப்படுவதும் சிரமமானது.
முகவர் நிலையங்களை கண்காணிப்பதற்கான பொறிமுறையை பணியகம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பதிவு செய்யப்பட்ட வௌிநாட்டு முகவர் நிறுவனங்கள் அமைப்பின் முன்னாள் தலைவர் எ.எல் அஸாம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.