மத்திய மாகாண ஆசிரியர்களுக்கான வீடமைப்புத் திட்டமொன்றை அறிமுகப்படுத்த எண்ணியுள்ளதாகவும் அதற்கான நிதி அடுத்த மாகாணசவை வரவுசெலவில் ஒதுக்கப்படும் என்றும் மத்திய மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணசபையின் மாதாந்த கூட்டத்தின் போது மாகாணசபை உறுப்பினர் சாந்தினி கோங்கஹாகே கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தமது தேவைக்காக மாணவர்களின் கல்வியை பாழாக்கக் கூடாது. தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக ஆசிரியர்கள் வீதியில் இறங்கினால் மாணவர்களின் கல்வியே பாதிக்கப்படும் என்பதை உணரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாகாணசபை உறுப்பினர் சாந்தினி கோங்கஹாகே கருத்து தெரிவிக்கையில், கஷ்டப்பிரதேசங்களில் நியமனம் பெற்று செல்லும் ஆசிரியர்கள் தங்குவதற்கான வசதிகள் இல்லாமையினால் குறுகிய காலத்தில் இடமாற்றங்களை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர். இதனை கவனத்திற்கொண்டு அவர்களுக்கான தங்குமிட வசதிகளை உருவாக்கிக்கொடுக்க முன்வரவேண்டும். ஆசிரியர்களும் எமக்கு கற்பித்த ஆசிரியர்கள் போன்று வர்த்தக நோக்கமின்றி மாணவர்களுக்கு கற்பிக்க முன்வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.