மத்திய மாகாண தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டு தேயிலைத் தோட்டக் காணிகள் மிகவும் சூட்சுமமான முறையில் சிங்களவர்களுக்கு பகிரப்படுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலுள்ள காணிகளே இவ்வாறு பகிர்ந்தளிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டி உன்னஸ்கிரியவுக்கு உட்பட்ட உன்னஸ்கிரிய, கலாபொக்க, கல்பீல்ல, ராக்சாவ, ரங்கல உட்பட 12 தோட்டங்கள் அரசாங்கத்துக்கு சொந்தமான காணிகளாகும்.
அரச பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் தரிசு நிலங்களாக காணப்படும் உன்னஸ்கிரியவுக்கு உட்பட்ட 12 தோட்டங்களின் காணிகள் மொத்தமாக 65 ஆயிரம் ஏக்கரை கொண்டுள்ளது.
இவ்வாறு 65 ஆயிரம் ஏக்கராகக் காணப்படும் காணிகளில் முதல் கட்டமாக 5 ஏக்கர் காணியை தனியார் ஒருவருக்கு வழங்குவதற்கு மறைமுகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
.
குறித்த பிரதேச சபையின் உயர் தலைமைகளும் இதற்கு உதவிப்புரிந்து வருகின்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்துகொண்ட தோட்டத் தொழிலாளர்கள் தோட்டங்களுக்குச் சொந்தமான அரசக் காணிகளை அவ்வாறு வழங்க முடியாது எனப் பிரதேச சபையிடம் வலியுறுத்தியும் அதனைப் பிரதேச சபை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையிலேயே குறித்த 12 தோட்டங்களைச் சேர்ந்த பெருந்தோட்ட மக்கள் இன்று முதல் காலவரயரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். தங்களுக்குத் தீர்வுக்கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் கூறுகின்றனர். அரசக்காணிகளை தனியாருக்கு விற்பதன் மூலம் எதிர்காலத்தில் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கும், இருப்புக்குமே பாதிப்பு ஏற்படும் என்பது அவர்களின் வாதமாகும்.
தொழிலாளர்களும், குறித்த 12 தோட்டங்களைச் சேர்ந்த மக்களும் போராட தீர்மானித்தப் பின்னர் அதற்கு செங்கொடிச் தொழிற்சங்கம் ஆதரவுத் தெரிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் மேகலாவிடம் இந்த விடயம் தொடர்பில் வினவியபோது,
அரசக் காணிகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதன் மூலம் பாதிக்கப்படபோவது தொழிலாளர்கள் மாத்திரமே. தோட்டத் தொழிலாளர்கள் 200 வருடங்களாக இந்த நிலத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாரம் இங்குதான் உள்ளது. அத்துடன், அது அவர்களின் பூர்வீக நிலமாகும்.
அரசாங்கம் அங்குள்ள காணிகளை தனியாருக்கு விற்பனை செய்ய வேண்டுமாயின் உன்னஸ்கிரியவுக்கு உட்பட்ட 12 தோட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 200 பேருக்கும் தலா 2 ஏக்கர் வீதம் காணிகளை பகிர்ந்தளித்துவிட்டுதான் விற்பனை செய்வதாயின் விற்பனை செய்ய அனுமதிப்போம் என்று அந்த மக்கள் கூறுகின்றனர்.
அவர்களின் கோரிக்கை நியாயமானது. தொழிலாளர்களின் இருப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதியளிக்க முடியாது. இதன் காரணமாகவே செங்கொடி தொழிற்சங்கம் இந்த மக்களின் போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்துள்ளதுடன், அதனை முன்னின்று நடத்தவும் தீர்மானித்தது என்று குறிப்பிட்டார்.
காலவரையரையற்ற போராட்டத்தில் குதித்துள்ள இந்த மக்களின் கோரிக்கையாக உள்ளதாவது, அரசு தனியாருக்கு காணிகளை விற்க வேண்டுமாயின் முதலில் அங்கு 12 தோட்டங்களில் உள்ள ஆயிரத்து 200 பேருக்கும் 2 ஏக்கர் வீதம் காணிகளைப் பகிர்ந்தளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தனியாருக்கு காணிகளை விற்க நாங்கள் அனுமதியளிக்க மாட்டோம். நாங்கள் இரவு பகல் பாராது தீர்வுகிடைக்கும் வரை போராடுவோம் என்று பிரதேச மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.