
பொறுமையிழந்த வட மாகாண பட்டதாரிகள் நேற்று (08) 10.30 மணி முதல் 11.30 மணிவரை யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மாதம் 27ம் திகதி யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக தமக்கு நிரந்தர தொழில் வாய்ப்புக் கோரி வட மாகாண பட்டதாரிகள் அமைதியான முறையில் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தனர். நேற்று 10 நாட்கள் ஆகியும் வரையில் அவர்களுக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுகொடுக்க உரிய அதிகாரிகள் முன்வராமையினால் வாய்களை கட்டியும் முகங்களை மறைத்தும் மனித ஒரு மணி நேர மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டக்காரர்கள் மாகாண, மத்திய அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதுடன் எதிர்ப்புப் பதாதைகளையும் வைத்திருந்தனர். தொடர்ந்து வடக்கு பட்டதாரிகளின் அவல நிலையை விளக்கும் வீதி நாடகமும் நடித்துக்காட்டப்பட்டது.
எமது அமைதிப் போராட்டத்தை உரிய அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை. எனவே நாம் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபடுகிறோம். எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் பல்கலைக்கழகம் சென்றோம். கனவுகளுடன் எம் பெற்றோர் எம்மை அனுப்பி வைத்தனர். இன்று அனைத்தும் கனவாக மட்டுமே உள்ளது.
எமது பிரச்சினைக்கு எழுத்து மூலமான உறுதியை வழங்கும் வரை நாம் ஓயப்போவதில்லை என்று இதன்போது போராட்டக்காரர்கள் கருத்துத் தெரிவித்தனர்.