மலேஷியாவில் 4000 வேலைவாய்ப்புக்களை பெற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமையினால் செல்ல விரும்புவோர் வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தை நாடுமாறு அதன் தலைவர் லஷ்மன் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தினூடாக மிகவும் பாதுகாப்பான, அதிக சம்பளத்துடன் பல அனுகூலங்களையும் பெறக்கூடிய வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள அவர், குறித்த வேலைவாய்ப்பிற்காக இதுவரையில் 400 பேர் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் மிகுதி வேலைவாய்ப்புக்கள் உள்ளமையினால் விரும்புகிறவர்கள் முகவர் நிலையத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டு அதில் தேர்ச்சியடைகிறவர்கள் வாய்ப்பினை பெறுவர். பதிவுக்கட்டணமாக 17000.00 ரூபாவும் மருத்துவ பரிசோதனைக்காக 12, 500.00 ரூபாவும் நிருவாக செலவுக்காக 15,000 ரூபாவுமாக மொத்தமாக 45,000 ரூபாவுக்குள் மட்டுமே செலவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், சுற்றுலா கைத்தொழில் சம்மேளனம் மற்றும் பொத்துவில் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து பொத்துவில் பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த வௌிநாட்டு வேலைவாய்ப்பு பெறுவதற்கான நடமாடும் சேவையின் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்திருந்தார்.