
விபசார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பெண் விடுதலை செய்யப்பட்டு இலங்கைக்கு திரும்பவுள்ளார் என்று சவுதி இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் இருந்த சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள டவாட்மி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இப்பெண்ணுக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அத்தண்டனை 3 வருட சிறைத்தண்டனையாக மாற்றியமைக்கப்பட்டது என்று சவுதியில் உள்ள இலங்கை தூதரகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமணமான 40 வயதான குறித்த பெண் வயது குறைந்த இலங்கை ஆண் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவருடைய தகாத உறவை பேணினார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஆணுக்கு நூறு கசையடிகள் வழங்க உத்தவிடப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் இலங்கை அரசு தலையிட்டதையடுத்து மரண தண்டனையை 3 வருட சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டது.
மரணதண்டனை சிறைத்தண்டனையாக மாற்றப்பட்ட போதே ஒன்றரை வருட சிறைத்தண்டனை அனுபவித்த குறித்த பெண் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் மிகுதி ஒன்றரை வருடமும் நிறைவடைந்த பின்னர் இலங்கைக்கு அழைத்துவர இலங்கை தூதரகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
வேலைத்தளம்/ Arab news