மலையகத்தில் பதில் அதிபர்களாக கடமையாற்றும் மூவாயிரம் பேரையும் நிரந்தர அதிபர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமுன்றத்தில் நேற்று (04) விஷேட வியாபார பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர், மலையகத்தில் பதில் அதிபர்களாக கடமையாற்றும் அதிபர்களுக்கு பாரிய சிக்கல் நிலை உள்ளது. அவர்களின் பதவி நிரந்தரம் இல்லாது உள்ளது. அதிபர் தரம் இல்லாது செயற்பட்டு வருகின்றனர். இன்று அவர்கள் ஓய்வுபெறும் நிலைமையில் உள்ளனர்.
இவ்வாறான பதில் அதிபர்களை நிராகரித்து செயற்படுவதில் கல்வி அமைச்சின் தவறும் உள்ளது. அவர்களுக்கு உரிய நேரத்தில் போட்டி பரீட்சை நடத்தாது இருந்தமை தவறனாது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இன்று மலையகத்தில் மூவாயிரம் அதிபர்கள் கடமையில் உள்ளனர். அவர்களை நிரந்தர அதிபர்களாக மாற்ற வேண்டும். அவர்கள் ஓய்வுபெற வேண்டிய நிலைமையில் உள்ளனர். ஆகவே அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி ஏனைய அதிபர்களை போட்டிப் பரீட்சை அடிப்படையில் தெரிவு செய்யும் முறைமையை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.