இலங்கையின் மலையகம் குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொள்கிறார்கள். அதில் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக மலையகப் பெண்கள் இருக்கிறார்கள். இப் பெண்கள் தமது நாளாந்த வாழ்க்கையில் சமூக, பொருளாதார, அரசியல், கலாசார மற்றும் பால்நிலை சார்ந்த பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
குறிப்பாக மலையகப் பெண்கள் எதிர்கொள்ளும்; பால்நிலை சார்ந்த சவால்கள் தொடர்பில் அதிகம் பேசப்படுவதில்லை. தமது அன்றாட வாழ்வில் சொல்லமுடியாத பல துன்பங்களைப் பெண்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. எழில் கொஞ்சும் மலையகத்தின் இயற்கைக்குப் பின்னால் மலையகப் பெண்களின் சொல்லமுடியாத வலிகளும் சவால்களும் இருக்கின்றன. அவர்களின் வாழ்கையை வைத்து அரசியல் செய்பவர்களாகத் தான் பலர் இருக்கிறார்கள்.
மலையக மக்களின் வறுமை நிலை அவர்களைப் பின்தங்கிய நிலைக்கு இட்டுச் சென்றதென்றால் அது மறுக்கமுடியாத உண்மை. மலையகத் தொழிலாளர்களின் உழைப்பு தோட்டத் தொழிற்சங்கங்களாலும் கம்பனிகளாலும் சுரண்டப்பட்டு வருகின்றது. தேயிலைத் தோட்டங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் தேயிலைத் தோட்டங்களில் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இன்றும் 1000 ரூபாய் சப்பளத்துக்காக இம் மக்கள் போராடி வருகின்றனர். ஓய்வற்ற நீண்ட வேலைநேரமும் கடினமான வேலையும் மலையகப் பெண்கள் எதிர்நோக்கும் மிகப் பெரும் சவாலாகும். இங்கு பெண் என்பதால் தமது வேலைக்கான ஊதியத்தில் கூடப் பாரபட்சத்தை எதிர்கொள்கிறார்கள்.
மலையக மக்களின் வாழ்க்கை அட்டைக்கடிக்கு மத்தியில் அல்லல்ப்பட்டுக் கொண்டிருக்கிறது. அட்டைப் பூச்சிகள் மற்றும் விஷ யந்துக்கள் போன்றவற்றைப் பொருட்படுத்தாது இந்த மக்கள் கடும் குளிரிலும் மழையிலும் வேலை செய்கிறார்கள். விபத்துக்களையும் இவர்கள் அடிக்கடி சந்திக்க நேரிடுகிறது. இறப்பர் தோட்டங்களில் பெண்கள் அதிகாலை மூன்று மணிக்குப பால்வெட்டச் செல்கிறார்கள். இங்கு கர்ப்பிணிப் பெண்கள் ஏழு மாதம் வரை வேலைக்குச் செல்வதாகக் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் தமது நாளாந்த வாழ்க்கையைக் கொண்டுசெல்வதற்கு தினமும் தொழிலுக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மழை காலத்தில் வேலையின்மையால் இம் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
மலையகப் பெண்பிள்ளைகள் கல்வி கற்பதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்ற போதும் வறுமை காரணமாகவும் கல்வி கற்பதற்கான வசதி வாய்ப்புக்கள் இன்மையாலும் அவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகின்றது. க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழக அனுமதி பெறுவதற்கும் பெருந்தோட்டப் பிள்ளைகள் சகல வசதிகளுடன் படிக்கும் பிள்ளைகளுடன் போட்டியிட வேண்டியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் பல்கலைக்கழக அனுமதிபெற்று பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் பெருந்தோட்டப் பிள்ளைகள் அங்கும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்படுகிறது.
வறுமை காரணமாகப் பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வியை இடைநிறுத்திவிட்டு செல்வந்தர்களின் வீடுகளில் வீட்டு வேலைகளைச் செய்வதற்காக நகரப்புறங்களுக்குச் செல்கின்றனர். இதன்போது அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் முகங்கொடுக்கின்றனர். வீட்டுவேலைக்கு கொழும்புக்குச் சென்ற பெண் பிள்ளைகள் சடலமாக மீட்கப்படும் சம்பவங்களும் கடந்த காலங்களில் அதிகம் இடம்பெற்றிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் கல்வி கற்று வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்லும் பெண் பிள்ளைகள் கூட சில சந்தர்ப்பங்களில் சமூகத்தால் ஒதுக்கப்படுபவர்களாகவும் பாரபட்சம் காட்டப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள்.
தோட்டப்புறங்களில் இடம்பெறும் பெண் பிள்ளைகளுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகின்றன. தோட்டப்புறங்களில் வேலைசெய்யும் பெண்கள் கங்காணிமார்களால் வசைகளையும் துஸ்பிரயோகங்களையும் எதிர்கொள்கின்றனர். சிறுவயது திருமணங்களால் பாதிக்கப்படுபவர்களாகவும் மலையகப் பெண் பிள்ளைகள் இருக்கின்றார்கள். வறுமை காரணமாக சிறு வயதில் வேலைக்குச் செல்பவர்களும் இங்கு அதிகம்.
பிள்ளைக் காம்பராக்களில் விட்டு விட்டு வேலைக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் சரியாகப் பராமரிக்கப்படுவதுமில்லை. அடிப்படை வசதிகளற்ற நிலையில் இந்தக் குழந்தைகள் வளர்கின்றனர்.
காலனித்துவ ஆட்சிக் காலத்தில் பிரித்தானியரால்; அமைக்கப்பட்ட லயத்து வாழ்க்கை முறையே இன்றும் தொடர்கிறது. சிறிய எட்டு அடி லயன்களுக்குள் தமது வாழ்க்கையை ஓட்டிச் செல்லும் மலையக மக்கள் ஒவ்வொரு நாளையும் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் நகர்த்திச் செல்கின்றனர். தனியான அறைகள் இல்லாமையால் பெண்கள் பால்நிலை சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்த லயத்து வாழ்க்கை முறை பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கின்றது.
அதுமட்டுமல்லாமல் எட்டு மணித்தியாலங்களுக்கு மேல் பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் இலட்சக்கணக்கான பெண்களுக்கு அங்கு மலசலகூட வசதியில்லை. மாதவிடாய் காலங்களில் இப் பெண்கள் பல சவால்களை எதிர்கொள்வதுடன் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். மாதவிடாய்த் துவாய்களை கூட வாங்க முடியாதவர்களாகப் பல பெண்கள் இருக்கிறார்கள்.
மருத்துவமனைகள் போதியளவில் இன்மையும் பெருந்தோட்டப்புற மக்கள் எதிர்கொள்ளும் மற்றுமொரு பிரச்சினையாக இருக்கிறது. அன்புலன்ஸ் வசதியில்லாத மருத்துவமனைகள் மலையகத்தில் அதிகம். நீண்ட நேரம் கடின உழைப்பை மேற்கொள்ளும் இந்த மக்கள் போசாக்கான உணவைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்களுக்குக் கூட ஊட்டச் சத்துள்ள உணவுகள் கிடைப்பதில்லை. இதனால் மலையக மக்கள் முக்கியமாகப் பெண்கள் போசாக்குக் குறைபாட்டாலும் நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். மலையக மக்களிடம் உள்ள வெற்றிலை போடும் பழக்கமும் புகையிலைப் பாவனையும் மலையகத்தில் புற்றுநோய்க்கு வழிவகுத்துள்ளது. பெரும்பாலான மலையக மக்கள் வாய்ப்புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
மதுபாவனையும் மலையகத்தில் மிகப்பெரும் சாபக்கேடாகும். இலங்கையில் ஏனைய பிரதேசங்களை விட மலையகத்திலேயே மதுபானக்கடைகள் அதிகம் எனப் புள்ளி விபரங்கள் பறைசாற்றுகின்றன. இரண்டு கிலோ மீற்றருக்கு ஒரு மதுபானக்கடையை மலையகத்தில் காணலாம் எனக் கூறப்படுகிறது. மலையகத்தில் அரசியல்வாதிகள் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள மதுபானத்தை வழங்கும் நடைமுறையில் இன்று வரை எந்த மாற்றமும் இல்லை. மலையகத்தில் உள்ள பெரும்பாலான மதுபான சாலைகள் சில அரசியல்வாதிகளுக்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களாலும் நடத்தப்படுவதாகக் கூறப்படுகின்றது. சட்டவிரோதமான மதுபானங்களும் மலையகத்தில் பிரபலமாக இருக்கின்;றது. குருதியை வியர்வையாகச் சிந்தி உழைக்கும் மலையகத் தொழிலாளர்களின் பணம் பெரும்பாலும் சாரயக்கடைகளின் வங்கிகளிலேயே சேமிக்கப்படுகின்றது. மலையகத்தில் மதுபானக்கடைகளில் கணக்குப் புத்தகங்கள் பேணப்படுவதும் சம்பளம் பெற்றவுடன் அந்தப்பணம் மதுபானக் கடைகளுக்குச் செல்வதும் கவலைக்குரிய விடயம். இவர்கள் தம் வாழ்க்கையைத் தாமே அழித்துக்கொள்பவர்களாக இருக்கிறார்கள். ஆண்கள் மதுபானத்துக்கு அடிமையாவதால் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்களே இருக்கிறார்கள். மதுபாவனை மலையகத்தில் வீட்டு வன்முறைகள் அதிகரிக்கவும் காரணமாகியுள்ளமையை மறுக்கமுடியாது. கடந்த காலங்களில் மதுபாவனை மலையகத்தில் பல கொலைகள் இடம்பெற வழிவகுத்துள்ளது. குடி போதையில் தனது மனைவி பிள்ளைகளையே கொலை செய்யும் சம்பவங்கள் பெருந்தோட்டக் குடியிருப்புக்களில் அதிகம்.
மேலும் இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் தற்கொலை செய்த சம்பவங்கள் மலையகத்தின் பல பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் விழிப்புணர்வூட்டப்படுவதுடன் பொருளாதார ரீதியிலும் வலுவூட்டப்படவேண்டும்.
மலையக மக்கள் அறியாமையாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தமது பிரதேசங்களில் இடம்பெறும் திருவிழாவில் வருடம் முழுவதும் உழைக்கும் பணத்தை வீண் விரயம் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். மூடக் கொள்கைகளும் பிற்போக்கான பழக்கவழக்கங்களும் மலையக மக்களிடமும் இழையோடியுள்ளது. இது மலையகப் பெண்களின் முன்னேற்றத்திற்குப் முட்டுக்கட்டையாகவும் அமைந்துவிடுகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய புரிந்துணர்வு பலருக்கு இல்லாதிருக்கின்ற காரணத்தால் தாம் வன்முறைகளை எதிர்கொள்கிறோம் என்று தெரியாமலே பல பெண்கள் கடந்து செல்கிறார்கள்.
அண்மைக் காலங்களில் மலையகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றபோதும் அது பாரிய மாற்றங்களாக இல்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். மலையகப் பெண்களின் திறமைகள் வெளிக்கொண்டுவரப்படவேண்டும். பெரும்பாலான பெண்கள் தமது உரிமைகள் பற்றி தெரியாதவர்களாக ஆணாதிக்கத்தையும் அடிமை வாழ்வையும் எதிர்கொள்கிறார்கள். பெண்களுக்கெதிரான வன்முறைகளில் இருந்து பெண்கள் பாதுகாப்புப் பெறுவதுடன் பொருளாதார ரீதியிலும் அவர்கள் வலுப்படுத்தப்படவேண்டும். பால்நிலை ரீதியான வன்முறைகளுக்கு எதிராக செயற்படுவது தொடர்பிலும் அதற்கு ஏதுவான சட்டங்களை தெரிந்திருப்பதுடன் அதனைச் செயற்படுத்தப் பெண்கள் முன்வரவேண்டும். அது மட்டுமல்லாமல் மலையகப் பெண்கள் சவால்கள் அற்ற ஆரோக்கியமான வாழ்வை எதிர்கொள்வது அவசியமாகும்.
அனுதர்ஷி லிங்கநாதன்- அனுதர்ஷி லிங்கநாதன் வலைப்பூ